நேற்று (04) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை பாகிஸ்தான் நட்பு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கம் பாகிஸ்தானின் பதில் உயர் ஸ்தானிகர் கௌரவ தன்வீர் அஹ்மத் அவர்களைச் சந்தித்து, பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளின் அவசர நடவடிக்கைகள் மற்றும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை பாராட்டியும் கடிதமொன்றை கையளித்தனர்.
மேலும், அந்த குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
அத்துடன், இரு நாடுகளுக்குமிடையிலான சகோதரத்துவ உறவை மேம்படுத்துவதற்கு கடினமாக உழைக்க வேண்டுமென்றும், அந்த சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் எந்த விடயத்தையும் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இத்தாக்குதலின் காரணமாக அவர்களும் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் நடந்ததை நினைத்து மிகவும் வருந்துவதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தெரிவித்க் கொண்டனர்.
இலங்கையில் உள்ள பௌத்த சமூகத்தினருக்கும் மற்ற அனைத்து சமூகங்களுக்கும் இடையே வலுவான உறவை கட்டியெழுப்புவதற்கு அவர்கள் கடுமையாக உழைப்பதாகவும் இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு பாகிஸ்தானில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் பற்றி எமக்கு அறிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சார்பில் அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம் மற்றும் அதன் உதவிப் பொருளாளர் டாக்டர் அஷ்-ஷைக் அஸ்வர் அஸாஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.