முஸ்லிம் தலைமைகள் அப்போது அடைய முடியாத எதனை தமிழ் முஸ்லிம் ஒற்றுமை கோஷத்தினூடாக சாதிக்க போகிறார்கள்? -டாக்டர் நாகூர் ஆரிப்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் தலைமைகள் அப்போது அடைய முடியாத எதனை தமிழ் முஸ்லிம் ஒற்றுமை கோஷத்தினூடாக சாதிக்க போகிறார்கள்? -டாக்டர் நாகூர் ஆரிப்


இப்போது பேசுபொருளாக மாறுகின்ற ஒரு விடயமாக தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்பதனைப் பார்க்கலாம். ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், இப்போது எதிர்பார்க்கின்ற இந்த ஒற்றுமைக் கோசமானது, பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு அவசியமானது என்று கருத்தாடப்படுகிறது. அப்படியான ஒரு இலக்கோடு தான் அந்த ஒற்றுமை எனின், மீண்டும் முஸ்லிம் சமூகம் தான் கறிவேப்பிலையாகப் பாவிக்கப்பட்டு பந்தாடப்படலாம்.


ஆயுத யுத்தம் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்றும் கூட, தமிழ் சமூகம் எதிரியாகப் பார்க்கப்படாத அதேவேளை, எந்தவிதமான தவறுகளுமே செய்யாமல் முஸ்லிம் சமூகம் பந்தாடப்பட்டது என்பது வரலாறு.


சிறுபான்மையினர் தான் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தி என்றதொரு காலம் இருந்தது. ஏதோவொரு வகையில், அந்த நிலமை பெரும்பான்மை சமூகத்தின் வகிபாகத்துடன் கடந்த இரு தேர்தல்கள் மூலமாகவும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதுவே அநேகமாக தொடரப் போகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை மூலமாக எதிர்பார்ப்பது என்ன? சாதிக்கப் போவது என்ன? அதுவும் அரசியல் அதிகாரம் கைகளில் தவழ்ந்த போது, அரசாங்கத்தின் நேரடி மற்றும் மறைமுக பங்காளர்களாக இருந்த போது அடைய முடியாத எதனை இப்போது அடையப் போகிறார்கள்?


ஏற்கெனவே 52 நாள் சம்பவத்தில் நடந்துகொண்ட விதத்திற்கும் முஸ்லிம் சமூகம் தான் அனுபவிக்கிறது. சமூகத்திற்காக பாடுபட்டு அதனால் கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் பரவாயில்லை. தமது சுயநலத்திற்காக பாடுபட்டார்கள். அவர்களும் அனுபவிக்கிறார்கள். சமூகமும் அனுபவிக்கிறது. பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக இரண்டு சமூகமும் ஒற்றுமைப்பட்டுள்ளது என்று 69யை 79/89 என்று மாற்றுவதற்கு அது வழிகோலக்கூடும். அதற்கேற்றவாறு அவர்கள் காய்நகர்த்தலாம். அப்போதும் பந்தாடப்படப் போவது முஸ்லிம் சமூகமாகத் தான் இருக்கக்கூடும்.இந்த ஒற்றுமைக்கோசம் தேர்தலுக்காகவே இருக்கப் போகின்றது. உதாரணமாக, கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக சிறுபான்மை ஒருவரே வரவேண்டும் என்ற காய்நகர்த்தலாகவே இந்த ஒற்றுமைக்கோசம் தலைதூக்கப் போகிறது.


யார் என்ன சொன்னாலும், பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நன்றாகவே விதைக்கப்பட்டுள்ளது. தேவையான போது விளைச்சலை அமோகமாக்கிக்கொள்ளலாம். யதார்த்தமான நிலவரம் இவ்வாறு இருக்கையில், குறுநில அரசியல் அதிகாரத்திற்காக (அரசாங்கமொன்றை அமைக்கும் வாய்ப்பேயில்லை) இந்த தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்கோசத்தை உருவாக்கி, அரசியல்வாதிகள் பயன்பெறலாம். ஆனால், அடிபடவும் பந்தாடப்படப்போவதும் முஸ்லிம் சமூகமே. குறிப்பாக, முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் எதுவும் செய்வார்கள். சமூகத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பது போல நடிப்பார்கள். ஈற்றில் கைசேதப்படப்போவது முஸ்லிம் சமூகமே. எதிர்ப்பரசியல் என்ற கோசத்தை கையிலெடுப்பதை விட, பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள நச்சுக்கருத்துகளை எவ்வாறு போக்குவது என்று சிந்தியுங்கள்.


குறிப்பு: அரசியலுக்கான ஒற்றுமைக்கோசம் வேறு, நிஜமான பரஸ்பர ஒற்றுமையான வாழ்க்கை வேறு


மூத்த கல்விமான் டாக்டர் நாகூர் ஆரிப்

தேசிய டெங்கு தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி - கொழும்பு


-மாளிகைக்காடு நிருபர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.