உரமேற்றி வந்த சீனக் கப்பல் எங்கு சென்றது? பலரின் கேள்விக்கான பதில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உரமேற்றி வந்த சீனக் கப்பல் எங்கு சென்றது? பலரின் கேள்விக்கான பதில்!


சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட விவசாய உரத்தை இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது.


இதையடுத்து, விவசாய உரத்தை ஏற்றி வந்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் சுமார் 70 நாட்கள் இருந்த நிலையிலேயே, தற்போது அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து மாயமாகியுள்ளது. இவ்வாறு மாயமான கப்பல் எங்கே சென்றது என்பது குறித்து தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட சீன செயற்கை விவசாய உரத்தை ஏற்றிய கப்பலான ஹிப்போ ஸ்பிரிட் (HIPPO SPIRIT) கப்பல், தற்போது சிங்கப்பூர் நோக்கி பயணித்து வருகிறது.


கடல் மார்க்கத்தை வெளியிடும் இணையத்தளங்களின் தரவுகளில், எதிர்வரும் 10ஆம் திகதி இந்த கப்பல் சிங்கப்பூரைச் சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 70 நாட்களாக நிலை கொண்டிருந்த இந்த கப்பல், கடந்த 04ஆம் திகதி சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.


மத்தியஸ்தம் செய்வது மற்றும் மாதிரிகளை வழங்கும் நோக்கில் இந்த கப்பல் சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதாக செயற்கை உரத்தை இலங்கைக்கு அனுப்பிய சீனாவின் சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம் தெரிவிக்கின்றது.


தமக்கு ஏற்பட்ட நட்டத்திற்காக சீனாவின் சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம், மத்தியஸ்த சபையின் ஊடாக 08 மில்லியன் டாலர் நட்டஈட்டை கோரியுள்ளது. வரையறுக்கப்பட்ட வணிக உர நிறுவனத்திடமிருந்தே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.


செயற்கை உரத்தை கொள்வனவு செய்யும் உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாக சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், உரத்தின் பெறுமதி, கப்பல் கட்டணம், மத்தியஸ்தத்திற்காக செலவிடப்படும் கட்டணம் மற்றும் வட்டி ஆகியன உள்ளடங்களாகவே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.


இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளாமையினாலேயே, சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


இலங்கை உர நிறுவனம், சீன உர நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக இது குறித்து அறிவித்துள்ளதகாவும் அவர் கூறுகிறார்.


சீன உர நிறுவனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சீன தூதர், கடிதமொன்றின் ஊடாக தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


எவ்வளவு உரத்துடன் கப்பல் பயணிக்கின்றது?


20,000 மெட்ரிக் டன் செயற்கை உரத்துடன் இந்த ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், கடந்த 70 நாட்களாக இலங்கை கடற்பரப்பிற்குள்ளேயே சுற்றியுள்ளமை, தரவுகளின் ஊடாக அறிய முடிகின்றது.


சுமார் 154 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல், பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலாகும்.


இந்த கப்பல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீள சீனா நோக்கி பயணிக்கவில்லை எனவும், இலங்கை கடல் எல்லைக்குள்ளேயே இருந்துள்ளதாகவும் சர்வதேச கடல்சார் தரவுகள் வழி அறிய முடிகின்றது.


இவ்வாறான பின்னணியில், சீன உரத்தை ஏற்றிவந்த இந்த கப்பலை நிராகரிப்பதற்கான காரணத்தை தெளிவூட்டி, முழுமையான அறிக்கையொன்றை சீன தூதரகத்திடம் கையளித்துள்ளதாக விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர், பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.


உரிய நிறுவனங்களின் அறிக்கைகளை கடந்த நவம்பர் மாதம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


அனுமதி வழங்கப்படாத கப்பலொன்றை பொறுப்பேற்கும் இயலுமை கிடையாது எனவும், அது சட்டத்திற்கு முரணானது எனவும் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவிக்கின்றார்.


இந்த உரத்தில் தீங்கு விளைவிக்கும் பதார்த்தம் உள்ளடங்கி உள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக, உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வு கூடமான சுவிஸ் எஸ்.ஜி.எஸ் நிறுவனத்திடம் அதன் மாதிரிகளை அனுப்பி வைக்குமாறு சீனா கோரியுள்ளது.


இந்த ஆய்வு கூடத்தினால் வெளியிடப்படுகின்ற பெறுபேறுகளை இரு நாடுகளும் நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சீனா கடந்த அக்டோபர் மாதம் அறிக்கையொன்றின் ஊடாக கோரியுள்ளது.


தமது நாட்டு உரத்தில் தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் காணப்படும் பட்சத்தில், நிபந்தனையின்றி, அதனை தாம் தமது நாட்டிற்கு கொண்டு செல்வதாகவும் சீனா கூறியுள்ளது.


தீங்கு விளைவிக்கும் பதார்த்தம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், நிபந்தனைகள் இன்றி, பணத்தை செலுத்தி உரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சீனா குறிப்பிடுகின்றது.


எவ்வாறாயினும், இன்று வரை எந்தவித இணக்கப்பாடுகளும் இன்றி, உரத்தை ஏற்றிய கப்பல் சீனா நோக்கி பயணிக்காது கடலிலேயே பயணித்து வருகின்றமை உறுதியாகியுள்ளது.


நன்றி - பிபிசி தமிழ்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.