சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் (உண்டி) மூலம் பணம் விநியோகம் செய்யும் மற்றும் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (01) அறிவித்துள்ளார்.
"அனைத்து புலம்பெயர்ந்த இலங்கையர்களும் தங்கள் வருமானத்தை நாட்டுக்கு அனுப்ப உத்தியோகபூர்வமான வழிகளை மட்டுமே பயன்படுத்துமாறு மத்திய வங்கி கேட்டுக்கொள்கிறது." என்றார்.
கடந்த வாரம், மத்திய வங்கியின் ஆளுநர், உத்தியோகபூர்வமற்ற வழிகள் மூலம் வரும் பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும், நடைமுறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சட்டப்பூர்வமான வழிகள் உள்ளன என்று கூறிய கப்ரால், இதற்காக முறையான முறைமைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
முன்னதாக, இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக் கொடுக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)