நாடு ஒருபோதும் இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சிலர் அரசாங்கத்தில் பதவி வகிக்கின்றமை ஒருபோதும் இராணுமயமாக்கலாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் முப்படையினர் கடந்த இரண்டு வருடங்களில் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையின் காரணமாக பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரச புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட ஏனைய அனைத்து புலனாய்வு பிரிவினரும் பலமான ஒரே வலையமைப்பாக தற்போது செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இராணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து பெற்றுக் கொடுத்த சுதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியன உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தலைகீழாக மாற்றப்பட்டதாகவும், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக நீதித் துறைக் கட்டமைப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.