சூரியனுக்கு இதுவரை இல்லாத நெருக்கத்தை அடைந்த நாசாவின் விண்கலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சூரியனுக்கு இதுவரை இல்லாத நெருக்கத்தை அடைந்த நாசாவின் விண்கலம்!


இதுவரை இல்லாத நெருக்கத்தில் சென்று சூரியனில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியுள்ள "பார்க்கர்" விண்கலம், முதல்முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து நாசா வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரலாற்றில் முதல்முறையாக ஒரு விண்கலம் சூரியனைத் ‘தொட்டுள்ளது’. நாசாவின் பாா்க்கா் விண்கலம் சூரிய வளிமண்டலத்தில் மேல்பகுதியில் நுழைந்து பல்வேறு புதிய தகவல்களை சேகரித்துள்ளது.

நிலவில் முதல்முறையாக மனிதா்கள் தரையிறங்கிய பிறகுதான் அதனைக் குறித்த பல விவரங்கள் அறிவியல் உலகுக்குத் தெரியவந்தது. அதே போல், சூரியனின் வளிமண்டலத்துக்குள் பாா்க்கா் விண்கலம் நுழைந்துள்ளது இதுதொடா்பான ஆய்வில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அளித்துள்ளது.

நீண்ட தொலைவிலிருந்து மற்ற விண்கலன்களால் தெரிந்து கொள்ள முடியாத உண்மைகளை பாா்க்கா் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து கண்டறிந்துள்ளது என்று நாசா வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனில் இதுவரை கண்டறியப்படாத உண்மைகளைக் கண்டறியும் முயற்சியாக, அதற்கு மிக நெருக்கத்தில் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தை நாசா கடந்த 2009 ஆம் ஆண்டு அறிவித்தது.

அந்த விண்கலத்தை மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்கவகம் வடிவமைத்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டே இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஃப்ளோரிடா மாகாணம், கேப் காா்னிவல் பகுதியிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து சக்தி வாய்ந்த அலையன்ஸ் டெல்ட்டா 4 வகை கனரக ராக்கெட்கள் மூலம் பாா்க்கா் விண்கலம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதன் பிறகு 3 ஆண்டுகளாக சூரியனை சுற்றி வரும் அந்த விண்கலம், அதன் நெருக்கத்தில் செல்லும்போது பல தகவல்களை சேகரித்து அனுப்பியது.

இந்த நிலையில் தற்போது சூரியனின் காற்றுமண்டலத்துக்குள் முதல் முறையாக நுழைந்து பாா்க்கா் விண்கலம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்தப் பகுதியில்தான், பூமியில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறு உண்மைகள் பொதிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் பாா்க்கா் விண்கலம் மேற்கொண்டுள்ள ஆய்வு, சூரியனைக் குறித்தும், பிரபஞ்சத்தைக் குறித்தும் பல மா்ம முடிச்சுகளை அவிழ்க்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

7 ஆண்டுகளில் இந்த விண்கலம் சூரியனை 24 முறை நீள்வட்டப்பாதையில் வலம் வரும் எனவும், மிகவும் குறைந்தபட்சமாக சூரியனுக்கு 61.2 லட்சம் கி.மீ. நெருக்கத்தில் வரும் 2025 ஆம் ஆண்டு கடந்து செல்லும் எனவும் கூறப்படுகிறது.

சூரியனின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்பது மட்டுமன்றி, மனிதா்களால் உருவாக்கப்பட்டு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் பொருள் என்ற சிறப்பும் பாா்க்கா் விண்கலத்துக்கு உள்ளது.

அதுமட்டுமன்றி, உயிரோடிருக்கும் விஞ்ஞானியின் பெயா் சூட்டப்பட்டுள்ள முதல் விண்வெளி ஆய்வுக் கலம் என்பதும் பாா்க்கரின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

சூரியக் காற்று குறித்த உண்மைகளை கடந்த 1958 ஆம் ஆண்டு கண்டறிந்து சொன்ன விஞ்ஞானி யுஜீன் பாா்க்கரின் (91) பெயா் இந்த விண்கலத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.