ஒமிக்ரொன் திரிபை கட்டுப்படுத்துவதற்கு மூன்றாம் தடுப்பூசி போதுமானதில்லை என வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானதென மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை ஒமிக்ரொன் திரிபு பரவலை அடுத்து தென்னாபிரிக்காவில் நான்காம் அலை உருவாகியுள்ளது.
இதற்காக வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தென்னாபிரிக்காவில் இந்த வைரஸ் திரிபு முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டதோடு இதுவரையில் இலங்கை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த திரிபு பரவியுள்ளது.
இதேவேளை, தென்னாபிரிக்க வைத்தியசாலைகளில் பெறப்பட்ட முதற்கட்ட தரவுகளுக்கு அமைய ஒமிக்ரொன் வைரஸ் திரிபு வேகமாக பரவலடைகின்ற போதிலும் அதனால் ஏற்படும் தாக்கம் குறைவாகக் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் ஒடிஸிசன் தேவைப்படும் அளவும் குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ, இதுவரையில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு காரணமாக ஏற்பட்ட மரணம் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்தார்.
அத்துடன் நியுமோனியா வரையிலான பாரிய நோய் நிலைமைக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதே தற்போது முக்கிய தேவையாகவுள்ளது.
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்றாம் தடுப்பூசி போதுமானதில்லை என தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இந்த தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதெனவும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.