கிழக்கு மாகாண மக்கள் மீது அடிமைச்சாசனமாக எழுதப்பட்ட 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்தக்கோரும் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணைபோவது முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டின் இறைமைக்கும் செய்யும் துரோகமாகும். இத்துரோகத்துக்கெதிராக கிழக்கு மக்கள் விழித்தெழ வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது பற்றி ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது, வடக்கு கிழக்கை இணைத்து முஸ்லிம்களை அடிமையாக்கிய 13வது திருத்தத்தை எதிர்த்தே முஸ்லிம் காங்கிரஸ் வளர்ந்தது. இவ்விணைப்பின் காரணமாக 40 வீதமாக இருந்த கிழக்கு மாகாண முஸ்லிம்கள் 17 வீதமாக குறைக்கப்பட்டனர். தொழில் வாய்ப்பு, காணி போன்றவற்றில் 17 வீதத்துக்கு தள்ளப்பட்டனர். 13வது திருத்தத்திற்கமைய மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டு வடக்கு கிழக்கு சபையால் பொலிஸார் உருவாக்கப்பட்ட போது அதில் இணைந்த முஸ்லிம் பொலிஸாரை அதே வடக்கு கிழக்கு சபையால் நியமிக்கப்பட்ட சக தமிழ் பொலிஸார் காரைதீவில் வைத்து நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட வரலாற்றை நாம் மறந்து விட முடியாது.
இலங்கையின் இனப்பிரச்சினையில் முஸ்லிம்களினதும் உடன்பாடு தேவை என இந்திய அரசு கூறியுள்ளதால் முஸ்லிம்களை ஏமாற்றி இதனை சாதித்துக்கொள்ளும் வகையில் ரவூப் ஹக்கீமை வளைத்துப்போட்டு காரியம் சாதித்துக்கொள்ள தமிழ் கட்சிகள் முனைகின்றனர். 2001ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் போது அன்று அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் மூன்றாவது தரப்பாக செல்லவேண்டுமே தவிர அரச தரப்பாக செல்ல வேண்டாம் என அன்றே நான் பகிரங்கமாக கூறினேன். அதனைக்கேளாமல் அரச தரப்பாகவே ஹக்கீம் சென்றதன் மூலம் இனப்பிரச்சினையில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கும் தனியான தீர்வு வேண்டும் எனும் மூன்றாந்தரப்பை இல்லாமல் செய்த முதல் துரோகத்தை ஹக்கீம் செய்தார்.
அது முதல் ஹக்கீம் இந்த முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுப்பதிலேயே தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தார். இந்த உண்மையை நாம் தொடர்ந்து சொன்ன போதும் கிழக்கு முஸ்லிம்கள் ஏமாந்த சோனகிரியாக முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களித்து ரவூப் ஹக்கீமை பலப்படுத்தினர்.
இப்போது முழு கிழக்கு மக்களையும், நாட்டின் இறைமையையும் இந்தியாவுக்கு காட்டிக்கொடுக்கும் மற்றொரு துரோகத்தை செய்கிறார். வடக்கு கிழக்கு இணைப்பால் கண்டியை சேர்ந்த ஹக்கீமோ அவரின் உறவினர்களோ பாதிக்கப்படவில்லை. ஆனால் நாம்தான் பல உயிர்களையும், உடமைகளையும், காணிகளையும் இழந்தோம். ஹக்கீமின் இம்முயற்சிகளுக்கெதிராக கிழக்கு மக்கள் விழிப்புற்று எம்மோடு இணைந்து குரல் எழுப்ப முன் வர வேண்டும். இல்லாவிட்டால் கிழக்கு மக்கள் வடமாகாண இனவாத தமிழ் அரசியல்வாதிகளின் மேலாதிக்கத்தின் கீழ் அடிமைகளாக வாழ வேண்டி வரும் என எச்சரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-நூருல் ஹுதா உமர்