தமிழகத்தில் இருந்து 900 திர்ஹம் சம்பளத்திற்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் புஜைராவில் கொத்தனார் வேலைக்காக வந்தவர் 25 வயதான தினகர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஊரில் உள்ள கடன்களை அடைக்கவே அமீரகம் வந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையை மஹ்சூஸ் எனும் லாட்டரி சீட்டு மாற்றியமைத்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறும் மஹ்சூஸ் லாட்டரி சீட்டு வாராந்திர டிராவில் தினகருக்கு அவருடைய முதல் முயற்சியிலேயே 10 மில்லியன் திர்ஹம் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 54 கோடி ரூபாய் பரிசாகக் கிடைத்திருக்கிறது.
தனது தாத்தா பாட்டியின் ஆசிர்வாதத்தால் இந்த வெற்றி கிடைத்ததாகக் குறிப்பிடும் தினகர், "விவசாயம் செய்ததில் ஏற்பட்ட கடன்களை அடைக்கவே நான் அமீரகத்திற்கு வந்தேன். நல்ல படிப்பு புதிய வாய்ப்புகளை உருவாகும் என எனக்குத் தெரியும், இருப்பினும் நான் 12 ஆவது மட்டுமே படித்திருக்கிறேன். இந்தப் பணத்தினைக் கொண்டு மீண்டும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன்" என்றார்.
தினகரின் மூத்த சகோதரர் ஒருவர் சவூதியில் பணிபுரிந்துவருவதாகவும் அவருடன் இணைந்து சொந்த ஊரில் விவசாயம் செய்வதே தன்னுடைய விருப்பம் என்கிறார் தினகர்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "என்னுடைய சின்ன வயது கனவான RX100 பைக்கை வாங்க இருக்கிறேன்" என்றார்.
தமிழக நடிகர் விஜய் திருமலை படத்தில் கூறியதைப்போல, "வாழ்க்கை ஒரு வட்டம், இங்கே தோற்பவர்கள் ஜெயிப்பார்கள்; ஜெயிப்பவர்கள் தோற்ப்பார்கள்” இப்போது நான் வாழ்க்கையில் இந்த வெற்றி மூலம் ஜெயித்திருக்கிறேன்" என்று மகிழ்ச்சியாக தினகர் குறிப்பிட்டார்.
அதன்படி, 1,33,40,45, 46 என்ற எண் தொடரை தினகர் டிராவில் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதுபற்றிப் பேசிய அவர், "என்னுடன் அறையில் தங்கியிருப்பவர்கள் இதில் கலந்துகொள்வதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே நானும் இந்தமுறை முதல் தடவையாக கலந்துகொண்டேன். முதல்முறை என்பதால் முடிவுகள் வருவதற்கு முந்தைய தினம் என்னால் தூங்க முடியவில்லை. இந்த மகத்தான வெற்றியை அளித்ததற்கு மஹ்சூஸ் டிராவிற்கு நன்றி" என்றார். (யாழ் நியூஸ்)