குறிஞ்சாக்கேணிபாலமா? குஞ்சாமணி பாலமா என்று கேலி செய்து சிரித்தவர்கள் இன்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள்!

குறிஞ்சாக்கேணிபாலமா? குஞ்சாமணி பாலமா என்று கேலி செய்து சிரித்தவர்கள் இன்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள்!


கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள், பெரியவர்கள் என 10 பேரளவில் காலமான செய்தி இலங்கையை துக்கத்தின் பால் ஆழ்த்தியிருந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். இருந்தாலும் பின்னணியில் சில ஹீரோக்களை சீரோக்களாக்கிய சம்பவங்களும் இவ்விடயத்தில் நடந்துள்ளது என்பதை பின்னோக்கி காட்டவே இந்த நினைவுபடுத்தலை முன்வைக்கிறோம். 

ஒரு வருடத்திற்கு முன் முஸ்லிங்களின் தாய் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கூடியிருந்தது. 20 க்கு ஆதரவளித்தல் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் தாருஸலாமை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. கூச்சலும் குழப்பமும் நிரம்பியிருந்த சபையில் திருகோணமலை மாவட்ட மக்களின் ஆணையை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் இப்போதைய தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தெளபீக் எழுந்து தனது பக்க நியாயங்களையும், கிழக்கு முஸ்லிம் அரசியலின் போக்குகள், தேவைகளையும், தனது மாவட்ட 10000 ஏக்கர் காணியின் நீர்ப்பற்றாக்குறை தொடர்பிலும் பேசி அதற்கான தீர்வை மகாவலிக் கங்கையிலிருந்து பெற 80 வீதமான வேலைகளை தான் முடித்து விட்டதாகவும் ஏனைய வேலைகளை முடிக்க அரசின் ஆதரவு தேவையென்ற விடயத்தை வலியுறுத்தி பேசிக்கொண்டிருந்தவர் முக்கியமாக கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பிலும், பாலம் இல்லாது விட்டால் உயிராபத்துக்கள் ஏற்படுமென்றும் அதன் அவசரத் தன்மைகள் தொடர்பிலும் பேசி தனது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்திற்கு விளக்கிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட அப்போதைய தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனும், பிரதித்தவிசாளர் நயீமுல்லாவும் "குறிஞ்சாக்கேணி பாலமும், குஞ்சாமணிப்பாலமும்" இந்த அரசை எதிர்ப்பதே எமது இலக்கு மக்கள் பிரச்சினையெல்லாம் பேச இங்கு வரக்கூடாது. அரசை கவிழ்ப்பது பற்றி மட்டும் பேசுங்கள் என்ற குரலுக்கு ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடமும் குபீரென சிரித்தனர் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். (அன்றைய உயர்பீடத்தில் கலந்து கொண்ட யாராவது இறைவன் மீது ஆணையிட்டு இப்படி ஒன்று நடக்கவில்லை என்று மறுப்பர்களா?). 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தெளபீக் அவர்கள் உயிராபத்து வரும் நிலையுள்ளதால் இப்பாலத்தை உடனடியாக அமைக்கவேண்டிய தேவைகளை பற்றி பேசியதை கிண்டலடித்தவர்கள் ஒருகணம் சிந்திக்க வேண்டும் மக்களின் குறைகளை தீர்ப்பது வெறுமனே ஒரு அரசியல் விளம்பரமல்ல. மக்களின் உயிருடன் கூட சம்பந்தப்பட்டிருக்கும் என்பதை இன்றைய சம்பவம் உணர்த்தியுள்ளது. அதே நேரம் இதே மு.கா தலைமை உட்பட பல முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த நல்லாட்சியில் இருந்தார்கள். இந்த மக்களின் துயரத்தை அறிந்து அன்று இந்த பாலத்தை கட்டியிருந்தால் இன்று இந்த 10 உயிர்களை இழக்க வேண்டி வந்திருக்காது. எனவே இந்த அரசு வந்த பின்பு இன்னும் இதனை காலம் கடத்துவதனால் பல உயிர்களை இழக்க நேரிடும் என்பதனால் தான் இந்த மக்களின் வலியும், கஷ்டமும் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தெளபீக் அவர்கள்  ஓடோடி சென்று இந்த பால நிர்மாண முயற்சிகளை ஆரம்பித்தார். அப்போதுதான் அரசு அவரிடமிருந்து 20க்கு ஆதரவை கோரியிருந்தது. அதே போன்று 10 ஆயிரம் ஏக்கரில் வேளாண்மை செய்து அதற்கான நீர்வசதிகளை மகாவலி கங்கையிலிருந்து கொண்டுவருவதனால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நன்மையடையும் என்ற கரிசனையில் தான் உயர்பீடத்திலும் அனுமதி கேட்டார்.

திருகோணமலை மக்களின் பசியை போக்கவும், உயிரை காக்கவும் போராடிய போது கிடைத்த பதில் நக்கலும் நையாண்டியுமே. எனவே நக்கலும் நையாண்டியும் செய்தவர்களுக்கு 10 உயிர்களை கொண்டு அதன் தாற்பரியத்தை இறைவன் உணர்த்தியுள்ளான். இது அவர்களை போன்றவர்களுக்கு பாடமாக அமையும் என்று நம்புகிறோம். இது போன்றுதான் இந்த நாட்டில் உயிராபத்துடன் சம்பந்தப்பட்ட பாதைகள், பாலங்கள், கட்டிடங்கள், அதே போன்று முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய நகரங்கள், கிராமங்கள், காணிகள் அதன் உரிமைகளை காக்க வாழ்வா சாவா என்று தொங்கிக்கொண்டிருக்கும் போது இதனால் மக்கள் வலியினால் துடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கூட்டம் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு இப்படி யாருக்காவது அல்லது அரசுக்காவது அல்லது எவனுக்காவது ஏசி எப்படி பிரபல்ய அரசியல் செய்து வாக்கை கூட்டலாம் என்று கணக்கு போடுகிறார்களே தவிர களத்தில் துடிக்கும் மக்களின் துயர் துடைக்க ஒழுங்கான நடவடிக்கை எடுக்க தயாரில்லை. 

அரசியல் சித்து விளையாட்டின் கோர முகமாக மக்களின் நலனை அனுதினமும் சிந்தித்த திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளினால் வென்ற பாராளுமன்ற உறுப்பினரும், இப்போதைய தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். தெளபீக் அவர்களின் வீடு உடைக்கப்படுகிறது. மக்களை நேசிக்காதவர்கள் இன்று ஹீரோக்களாக வளம் வருகிறார்கள். எனவே இனியாவது சமூகத்தின் அவல நிலையை எதார்த்தபூர்வமாக சிந்தித்து செயற்படக்கூடிய அரசியல் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

-கிழக்கு மாகாண இளைஞர் அமையம் 
திருகோணமலை மாவட்ட கிளை

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.