அனைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இன்று முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவை ஊழியர்களுக்கு அறிவிக்கும் சுற்றறிக்கையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் இன்று (02) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுற்றறிக்கையின்படி, துணைப் பொது மேலாளரின் அனுமதியின்றி மின்சார சபை ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாது. யாழ் நியூஸ்
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்தி ஊழியர்கள் கொழும்புக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அவ்வாறு செய்தால் அது அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக கருதப்படும் என எச்சரித்துள்ளார்.
நாளை (03) இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்க (TU) கூட்டமைப்பினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பாரிய அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகயீன விடுமுறைக்கு விண்ணப்பித்ததன் பின்னர் நாளை கொழும்பில் சங்கமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றறிக்கைக்கு பதிலளித்த கூட்டமைப்பு இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
நாளைய தினம் திட்டமிடப்பட்டுள்ளது வேலைநிறுத்தம் அல்ல, போராட்டம் என்பதை மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
கெரவலபிட்டியவில் உள்ள யுகடனவி திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை விற்பது தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான New Fortress Energy Inc உடனான ஒப்பந்தத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இலங்கை மின்சார சபையின் United Trade Union Alliance போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. .
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என ரஞ்சன் ஜெயலால் உறுதியளித்துள்ளார்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மின் உற்பத்தி நிலையங்களின் ஊழியர்களும் கொழும்புக்கு வரவழைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், எவ்வாறாயினும் மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால் அதனை சரிசெய்வதற்கு எவரும் இருக்க மாட்டார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் எந்தவொரு செயலிழப்புக்கும் இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு பொறுப்பேற்காது என்று ஜெயலால் வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)