ஜனாதிபதியின் உரையில் மறைந்திருந்த மூன்று கதைகள்!

ஜனாதிபதியின் உரையில் மறைந்திருந்த மூன்று கதைகள்!


கோட்டாபய ராஜபக்சவின் வாய் பொய் கூறினாலும் நாக்கு பொய் சொல்லாது என்பது உண்மை. அண்மையில் அவர் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை இதற்கு உதாரணமாகும். அந்த உரையில் மறைந்துள்ள மூன்று கதைகள் உள்ளன. அந்த மூன்று கதைகளை மறைத்துக்கொண்டு அவர் உரையாற்றினார். பொதுஜன பெரனவின் ஜனாதிபதி என்ற வகையில் இந்த கதைகளை மறைக்க முடியாது என்று அறிந்தே அவர் மறைத்து வைத்துள்ளார்.


கோட்டாபய ராஜபக்ச மறைக்கும் அந்த மூன்று இரகசியங்கள் என்ன?


முதலாவது இரகசியம்


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன தோல்வியடையும் என்று அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பொதுஜன பெரமுனவை காப்பாற்றவே தான் தோல்வியடைந்தால் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார். தனது அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதால், வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதை தவிர்க்க முடியாது என்பதையே அவர் மறைமுகமாக கூறுகின்றார்.


அடுத்த மூன்று ஆண்டுகளில் தனது அரசாங்கம் வெற்றிகரமாக இருக்காது என்பதை உணர்ந்த காரணத்தினாலேயே தன்னை தோற்கடித்து ஆட்சிக்கு கொண்டு வர வேண்டிய சக்தி பற்றி மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


இரண்டாவது இரகசியம்


அவர் பேசுவது அடுத்த ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியை பற்றி அல்ல, குழு அல்லது தரப்பினர் பற்றி பேசுகிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அவசரத்தில் அவர் இருக்கின்றார். கட்சியின் தலைமைத்துவத்தை பெற்று கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்று ஜனாதிபதியாக பதவிக்கு வராது, திடீரென ஜனாதிபதியாக பதவிக்கு வரும் அனைவரும், தமது முதலாவது பதவிக்காலம் முடியும் முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அச்சம் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் பொதுத் தேர்தலை நடத்தவே முயற்சித்தனர்.


டி.வி.விஜேதுங்க, ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்ட பின்னர், திடீரென ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர். உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் அவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தான் கழுத்தை கொடுப்பதற்கு முன்னர் பரீட்சித்து பார்க்க வேண்டும் என்ற அவரது எண்ணம் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.


2015 ஆம் ஆண்டு திடீரென ஜனாதிபதியாக பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனவும் இவ்வாறே சிந்தித்தார். 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும் முன்னர், ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற தடையை கவனத்தில் கொள்ளாது அவர் நாடாளுமன்றத்தை கலைத்தார். பொதுத் தேர்தலுக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள அவர் கொண்டிருந்த அச்சமே இதற்கு காரணம்.


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆசை மைத்திரிபாலவுக்கு இருந்தது. அச்சமும் இருந்தது. தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், பிரேமதாச ஆதரவாளர்கள் தன்னை தோற்கடிப்பார்கள் என்ற அச்சம் டி.பி. விஜேதுங்கவுக்கு இருந்தது. அதேபோலவே தான் உடனடியான ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால், தன்னை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கும் என்ற அச்சம் மைத்திரிபாலவுக்கு இருந்தது. இதே அச்சம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கின்றதா என்பது தெரியாது.


“நான் ஜனாதிபதியாக தெரிவாகி, உங்களை வெற்றி பெற செய்தேன். எனினும் என்னை இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வரும் தேவை உங்களுக்கு இல்லை” என கோட்டாபய ராஜபக்ச மனதில் கேள்வி எழுப்பிக் கொள்கிறாரோ தெரியவில்லை.


மைத்திரியை போன்று இருங்கள் வேலையை காட்டுகிறேன் என்று கோட்டாபய அவசர பொதுத் தேர்தலுக்கு செல்ல தருணம் பார்த்துக்கொண்டிருக்கலாம். இதனடிப்படையில் நோக்கும் போது, மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்பதை மாத்திரம் அவரது உரையை அடிப்படையாக கொண்டு ஒரு முடிவுக்கு வரலாம்.


ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் எண்ணம் கோட்டாபயவுக்கு இருக்குமாயின் அவர் ஒரு நபரை பற்றி பேசியிருப்பாரே அன்றி, தரப்பினர் பற்றி பேசியிருக்க மாட்டார்.


மூன்றாவது இரகசியம்


அடுத்த பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரலாம் என்பதை ஜனாதிபதி யூகித்துள்ளார். பழையவர்களை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டாம் என அவர் ஐக்கிய மக்கள் சக்தி பற்றியே கூறுகிறார்.


ஜனாதிபதி கோட்டாபய, ஒரு இராணுவ அதிகாரி என்பதால், புலனாய்வு தகவல்கள் மீது அவர் கூடுதல் நம்பிக்கை கொண்டவர். புலனாய்வு தகவல்கள் மூலம் அடுத்து தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறலாம் என்பதை அவர் அறிந்திருக்கலாம். ஐக்கிய மக்கள் சக்தி, கோட்டாபயவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை தவிடுபொடியாக்கியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டவர் போன்று அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் மீது கடும் கோபத்தில் பேசுகிறார்.


தான் எதிர்பார்த்தது இப்படியான எதிர்க்கட்சியல்ல எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் எதிர்பார்த்தது அடங்கி செல்லும் எதிர்க்கட்சி என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. மக்களின் வாக்குகள் மூலம் சாதனைப்படைத்து, ஜனாதிபதியாக தெரிவாகி, அதிகளவான அதிகாரங்களை தன்வசப்படுத்திய தன்னையும் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆண்டுகளில் தரைமட்டமாக்கி விட்டது என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.


ஜனாதிபதியின் இந்த உரையானது, சஜித் பிரேமதாசவுக்கு பலமில்லை, ஐக்கிய மக்கள் சக்தி என்பது கட்சியல்ல, பலவீனமான எதிர்க்கட்சி எனக் கூறி வரும் பண்டிதர்களுக்கு சிறந்த பதிலாக அமைந்துள்ளது. சஜித், கோட்டாபாயவுடன் உடன்பாட்டை செய்துள்ளார் எனக் கூறும் பண்டிதர்களுக்கு சிறந்த பதில்.


சஜித் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஆட்சிக்கு வரும் என்பதை அறிந்து, ஜனாதிபதி பீதியில் இருக்கின்றார் என்பது தெளிவு. பழையவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறார். இதன் மூலம் ஜே.வி.பிக்கு வாக்களித்தாலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறார்.


ஜே.வி.பிக்கு ஆட்சிக்கு வந்தால், கோட்டாபயவுக்கு பரவாயில்லை. அவர் ஐக்கிய மக்கள் சக்தி மீதே அச்சம் கொண்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், தான் ஜனாதிபதி பதவியை தூக்கி எறிந்து விட்டு, வீட்டுக்கு செல்ல நேரிடும் எனவும் ஜே.வி.பி ஓரளவுக்கான ஆசனங்களை கைப்பற்றினால், அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தை அச்சாரு போல் மாற்றி விடலாம் என்பதை கோட்டாபய அறிந்திருக்கலாம். இதன் காரணமாகவே பழையவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் கூக்குரலிடுகிறார்.


எதிர்க்கட்சியில் இருக்கும் போதே ஐக்கிய மக்கள் சக்தி தன்னை ஆட்சி செய்ய விடுவதில்லை என்றால், அரசாங்கத்தை கைப்பற்றி ஆட்சிக்கு வந்தால், தனது ஜனாதிபதி பதவிக்கு ஏற்படும் நிலைமையை அவர் உணர்ந்துள்ளார்.


கட்டுரையாளர் - உபுல் ஜோசப் பெர்னாண்டோ 

மொழியாக்கம் - ஸ்டீபன்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.