நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப்சாய் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
மலாலா யூசுஃப்சாய் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மேலாளரான ஆசிர் மாலிக் ஆகியோரின் திருமண வைபவம் இஸ்லாமிய முறைப்படி இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுள்ளது.
24 வயதான மலாலா, இது தனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணம் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெண் உரிமை செயற்பட்டாளரான மலாலா யூசுஃப்சாய், பெண்கள் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தமையால் 2012 ஆம் ஆண்டு தலிபான்களால் தலையில் சுடப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு பிரித்தானியா குடியுரிமை வழங்கியதுடன் ஐக்கிய நாடுகளின் சிறுமிகள் உரிமைக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.
பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த நிலையில் தொடர்ந்தும் மலாலா யூசுஃப்சாய்க்கு பல்வேறு தரப்பினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
சிறுவர் பால்ய திருமணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குரல் கொடுத்தமையால் மலாலாவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், 17 வயதில் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மலாலா யூசுஃப்சாய் பெண்கள் உரிமைக்கான குரலாகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.