உதாசீனப்படுத்த வேண்டாம்! விதிமுறைகளை மீறினால் மீண்டும் பழைய நிலையே! -வைத்தியர் அன்வர் ஹம்தானி

உதாசீனப்படுத்த வேண்டாம்! விதிமுறைகளை மீறினால் மீண்டும் பழைய நிலையே! -வைத்தியர் அன்வர் ஹம்தானி


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சிறியளவிலான தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை உதாசீனப்படுத்தக் கூடாது. காரணம் கொவிட் அபாயம் இன்னும் குறைவடையவில்லை.


எனவே அபாயத்தை உணர்ந்து அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றினால் மாத்திரமே புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் தடையின்றி அன்றாட வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று மருத்துவ தொழிநுட்ப சேவையின் பணிப்பாளர் , சுகாதார அமைச்சின் கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளின் பிரதான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.


கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் சிறு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.


கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 500 - 550 ஆகக் காணப்பட்ட நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை தற்போது 650 - 725 ஆக உயர்வடைந்துள்ளது.


நாடளாவிய ரீதியிலுள்ள 175 கொவிட் சிகிச்சை நிலையங்களில் 30 சதவீதமான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே பாடசாலைகள் திறக்கப்பட்டு, ஏனைய செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.


எனினும் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர் எண்ணிக்கையில் சிறு அதிகரிப்பினை இப்போதே கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்வரும் வாரங்களில் கடந்த சில மாதங்களாகக் காணப்பட்ட யுகத்திற்கே மீண்டும் செல்ல வேண்டியேற்படும்.


சிறியளவிலான இந்த தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை உதாசீனப்படுத்தக் கூடாது. காரணம் கொவிட் அபாயம் இன்னும் குறைவடையவில்லை.


எனவே அபாயத்தை உணர்ந்து அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றினால் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் தடையின்றி அன்றாட வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முடியும்.


அவ்வாறில்லை எனில் நத்தார் மாதத்திலும், புத்தாண்டு பிறப்பின் போதும் கடந்த வருடங்களைப் போன்று கட்டுப்பாடுகளுடனேயே கொண்டாடங்களில் ஈடுபட வேண்டியேற்படும் என்றார்.


எம்.மனோசித்ரா


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.