நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய உயர்தர இராணுவ சிறப்புப் படையணி!

நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய உயர்தர இராணுவ சிறப்புப் படையணி!


பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது வேறு எந்தவொரு தேசிய அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் செயற்பாடுகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் உயர்தர இராணுவ படையணியாக புதிய படையணியொன்று  உறுவாக்கப்பட்டுள்ளது.


இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு, விசேட அதிரடிப் படையணி மற்றும் ஏனைய படையணிகள் ஆகியவற்றினை இணைத்து 'முதலாவது இலங்கை இராணுவ படையணி' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு சாலியபுர கஜபா படையணித் தலைமையகத்தில்  இடம்பெற்றது.


இராணுவத் தளபதியின் முன்னோக்கு வழி மூலோபாய 2020 - 2025 திட்டக் கொள்கையின் ஒரு அங்கமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் அவருக்கு இராணுவ சம்பிரதாய முறையின்பிரகாரம் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.


'வேகம், சக்தி, தைரியம்' என்ற நோக்கக்கூற்றினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மேற்படி படையணியின் சின்னத்தினை இலங்கை இராணுவத்தின் முதலாவது படையணி படையினருக்கு பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஆகியோருடன் இணைந்து அணிவித்தார்.


இதன் போது முதலாவது இலங்கை இராணுவ படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவுக்கான படையணி சின்னத்தினை பாதுகாப்பு செயலாளர் அணிவித்து வைத்ததுடன் அப்படையணியின் கொடியையும் வழங்கினார். கிளிநொச்சியில் உள்ள தலைமையகத்தில் இருந்து செயல்படும் இலங்கை இராணுவ முதலாவது படையணியின் அதிகாரப்பூர்வ வலையமைப்பினையும் பாதுகாப்பு செயலாளர் ஆரம்பித்து வைத்தார்.


இந்த புதிய படையணியானது 53 ஆவது படைப்பிரிவு , 58 ஆவது படைப்பிரிவு , கொமாண்டோ படையணி, சிறப்புப் படையணி பிரிகேட் , எயார் மொமைல் பிரிகேட் , காலாட்படை பிரிகேட் மற்றும் கிளிநொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏனைய படையணிகளை உள்ளடக்கி உறுவாக்கப்பட்டுள்ளதோடு, எதிர்பாராத சூழ்நிலைகளை நிவர்த்தி செய்ய அல்லது திடீர் குழப்பங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் முக்கிய இராணுவப் படையில் இருந்து அழைப்பின் பேரில் செயல்பட உதவியாக அமையக் கூடிய வகையில் சிறந்த படையணியாக செயல்படும்.


கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு மற்றும் சிறப்பு அதிரடி படையணி ஆகிய படையணிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வந்தாலும் மேற்குறித்த படையணிகள் குறித்த படையணியுடன் இணைத்து சமகால பாதுகாப்பு இயக்கவியல், இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், தொற்றுநோய்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது வேறு எந்த தேசிய அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் செயலற்பாடுகளுக்கு ஒரு சக்தியாக உயர்தர இராணுவ படையணியாக உருவாக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.


இராணுவத் தளபதியின் தொலைநோக்கு 'முன்னோக்கு வழி மூலோபாயம் 2020-2025' என்பது போர் ஒத்துழைப்பு மற்றும் போர் சேவை ஒத்துழைப்பு படையினருடன் ஒருங்கிணைந்த மற்றும் தேவையான கூட்டு நடவடிக்கைகளுடன் பொருத்தமாக குழுவாக இருக்கும் முகமாக தேசம் மற்றும் படையினரின் பாதுகாப்பிற்கான சக்தியாக பல்வகைப்பட்ட தற்செயல் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்த சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவினரை வைத்திருக்கும்.


-எம்.மனோசித்ரா


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.