பெண்ணொருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனை வெற்றி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணொருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனை வெற்றி!


மனிதர்களுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சோதனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள், சோதனை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். 

சிறுநீரகச் செயல்பாடு முடக்கப் பிரச்னையுடன் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் பெற்றோரது அனுமதி பெற்று, அவருக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் எடுக்கப்படுவதற்கு முன்னதாக இந்தச் சோதனையை மருத்துவர்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள NYU Langone மருத்துவ மையத்தில் மேற்கொண்டுள்ளனர்.

மனிதர்களுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சோதனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதற்கான தேவையும் தற்காலத்தில் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 1,07,000 பேர் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்காக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மனித உடலுறுப்புகள் மாற்று சிகிச்சைக்கு, உறுப்புகள் கிடைப்பது மிகப்பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. கள்ளச் சந்தையில் உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது. 

இந்தச் சூழல் ஓரளவு மாற, உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடைபெற்று வந்தாலும், விலங்கின் உறுப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்வது முக்கியமான தீர்வுக்கான முதல்படி என மருத்துவ உலகம் நம்புகிறது.

சிறுநீரகம், ரத்தத்தில் இருக்கும் கழிவுகள் மற்றும் தேவையற்ற திரவத்தை வெளியேற்ற செயல்படும் உறுப்பு. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற மேலே குறிப்பிட்ட அறுவை சிகிச்சையில், பன்றியின் சிறுநீரகத்தை மூளைச் சாவு அடைந்த பெண்ணின் ரத்த நாளங்களில் பொருத்தி, அதை மூன்று நாள்களுக்குக் கண்காணித்தனர். சிறுநீரகம் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சரிவர செயல்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

17-ம் நூற்றாண்டு முதலே விலங்கின் உடலுறுப்புகளை மனிதனுக்கு மாற்றுவதற்கான மருத்துவ அறிவியல் யோசனைகள் பிறக்கத் தொடங்கின. ஆரம்பத்தில் ரத்தமாற்று சிகிச்சைக்காக விலங்கு ரத்தம் மனிதனுக்குச் செலுத்தப்பட்டு அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 

20-ம் நூற்றாண்டில் விலங்குகளின் உறுப்புகளை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். உயிரிழக்கவிருந்த குழந்தை, 21 நாள்கள் மனிதக் குரங்கின் இதயத்தைக் கொண்டு இதற்கு முன்பு உயிர்பிழைத்திருந்தது.

ஆனால், மனிதர்களுக்கு பன்றிகள்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் குரங்குகளை விட வெற்றிக்கான அதிக சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன. எனவேதான் இந்த முயற்சியில் பன்றிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது முதல்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றிருப்பதையடுத்து, சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை நோக்கி அடுத்தகட்டப் பரிசோதனைகள் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.