அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் மருத்துவ மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
75 வயதான பில் கிளிண்டனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படவில்லை என்றும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு முந்தைய இதய பிரச்சினை அல்லது கொரோனாவுடன் தொடர்புடையதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில் கிளிண்டனுக்கு இரத்த தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பில் கிளிண்டன் செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் யூரேனா டுவிட்டரில் கூறும்போது, பில்கிளிண்டன் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருக்கு சிறந்த கவனிப்பை வழங்கிய மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார் என அதில் குறிப்பிட்டுள்ளார்.