அரசாங்கத்தை விமர்சிக்கும் கலாசாரத்திலிருந்து விலகி மக்களுக்கு சேவையாற்றும் கலாசாரத்தை கட்டியெழுப்புவோம்! -சஜித்

அரசாங்கத்தை விமர்சிக்கும் கலாசாரத்திலிருந்து விலகி மக்களுக்கு சேவையாற்றும் கலாசாரத்தை கட்டியெழுப்புவோம்! -சஜித்


அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் விமர்சித்து, போராட்டங்களை நடாத்துவதுடன் அதனை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, பதவி கவிழ்ப்பதே எமது நாட்டில் எதிர்க்கட்சிகளால் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலாக இருந்திருக்கின்றது. இருப்பினும் நாம் அந்தக் கலாசாரத்தை மாற்றியமைத்து நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய செயற்திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றோம். அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியானது எதிர்வருங்காலங்களில் வழமையான அரசியல் கலாசாரத்திலிருந்து விலகி, நாட்டுமக்களுக்கான சேவையிலேயே ஈடுபடும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 'சத்காரய' செயற்திட்டத்தின்கீழ், புத்தல வகுருவெல ஸ்ரீ போயமலு ரஜமகா விகாரையின் விகாராதிபதி ஞானானந்த தேரர் உள்ளடங்கலாக விகாரையின் நிர்வாகசபை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அப்பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் நவலோக நிறுவனத்தின் நிதியுதவியுடன் 28 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று சஜித் பிரேமதாசவினால் நேற்று (19) மக்கள் பாவனைக்காக வழங்கிவைக்கப்பட்டது.


அதனைத்தொடர்ந்து அங்கு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித்தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் கூறியதாவது,


நாம் இந்நாட்டின் அரசியலில் புதியதொரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றோம். சுதந்திர இலங்கையின் ஜனநாயகக்கட்டமைப்பின்கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அனைத்து அரசாங்கங்களும் ஒவ்வொருவிதமான அரசியலில் ஈடுபட்டிருப்பதுடன் நாட்டையும் நிர்வகித்திருக்கின்றன. இருப்பினும் ஒவ்வொரு அரசாங்கங்களின்கீழும் ஆற்றப்பட்ட சேவைகள் நாட்டுமக்கள் பயனடையக்கூடியவகையிலும் அவர்களுக்குத் திருப்திகரமானவையாகவும் அமைந்தனவா? என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும்.


அந்தவகையில் நாட்டின் பெரும்பாலான மக்கள் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் முழுமையாக நிராகரிக்கின்றார்கள் என்ற விடயம் அண்மைக்காலத்தில் வெளிப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களில் மாத்திரமன்றி, நிர்வாகமுறைமையிலும் அபிவிருத்தி செயற்திட்டங்களிலும் ஆரோக்கியமான மாற்றத்தைக்கோரும் நிலைக்கு நாட்டுமக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். 


அத்தகைய மாற்றமொன்று உதயமாகியிருப்பதை இப்போது நாம் நிரூபித்திருக்கின்றோம். ஏனெனில் இதற்கு முன்னரொருபோதும் எதிர்க்கட்சிகள் மக்கள்சேவையில் ஈடுபட்டதில்லை. மாறாக அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் விமர்சித்து, போராட்டங்களை நடாத்துவதுடன் அதனை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்கான நடவடிக்கைகளிலேயே எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுவந்திருக்கின்றன. கடந்த காலத்தில் எமது அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அனைவருக்கும் நினைவிலிருக்கும்.


'காய்ச்சலோ அல்லது தும்மலோ ஏற்பட்டாலும் ஆர்ப்பாட்டம்' என்ற நிலையே அப்போது காணப்பட்டது. பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியில் இருந்தபோது அதனூடாக நாட்டுமக்களுக்கான எந்தவொரு சேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில் ஆளுந்தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி, அதனை கவிழ்ப்பதே எதிர்க்கட்சிகளின் பாரம்பரியமாக இருந்துவந்திருக்கின்றது.


இருப்பினும் நாம் அந்தக் கலாசாரத்தை மாற்றியமைத்திருக்கின்றோம். நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி, அவற்றை மேம்படுத்தக்கூடிய செயற்திட்டங்களையே நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம். எம்வசம் ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை முன்னிறுத்திய சேவைகளை மேற்கொள்வோம் என்பதை நாம் நிரூபித்திருக்கின்றோம். அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியானது எதிர்வருங்காலங்களில் அரசியலில் ஈடுபடுவதிலிருந்து விலகி, நாட்டுமக்களுக்கான சேவையிலேயே ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார். 


-நா.தனுஜா


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.