கட்சியில் இருந்து வெளியேறுங்கள் - முன்னாள் ஜனாதிபதிக்கு வந்த அறிவிப்பு

கட்சியில் இருந்து வெளியேறுங்கள் - முன்னாள் ஜனாதிபதிக்கு வந்த அறிவிப்பு

கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்க வேண்டிய தேவை இல்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத பங்காளிக் கட்சியினர் அரசாங்கத்திலிருந்து தாராளமாக வெளியேற முடியும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் அரசாங்கத்திற்குள் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கும், பிரதான கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்துவரும் நிலையில், ஆளும் கட்சியின் சில உறுப்பினர்கள் வெளிப்படையாகவே அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பில் கொழும்பின் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி அவ்வாறு அரசாங்கத்தை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் சிறிலங்கா பொதுஜனமுன கட்சியின் ஊடாகவே நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடாமல், தனித்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் மக்களினால் புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைக்கும், நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கும் அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ந்து தடையாக செயற்படுவதாகவும், இதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்து தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞசாட்டியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதால் எவ்வித பயனும் இரு தரப்பினருக்கும் ஏற்படாது எனவும், பங்காளி கட்சியினர் அரசாங்கத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசாங்கம் தொடர்ந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கும் பங்காளிக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.