பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இருசு அஷேன் என்ற மாணவன் அவரின் வீட்டில் அமைந்திருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெற்றிலைக் கூறு விற்று தனது மகனின் கல்வி நடவடிக்கைகாக மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் தவணை முறைக்கு கைப்பேசி ஒன்றை உயிரிழந்த மாணவரின் தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த தினம் 11 வயதுடைய அஷேன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் அவரது தந்தை தெரிவித்ததாவது,
மதியம் 2.45 மணியளவில் கீழ் கடையில் இருந்து எனக்கு போன் ஒன்று வந்தது. வெற்றிலைக்கூறு ஒன்று கூட இல்லை என்று. பின்னர் நான் மகனை அழைத்தேன். மகன் விரைவாக வந்தார். பின்னர் மகனிடம் நான் கூறினேன், விரைவாக வெற்றிலைக்கூறு கொஞ்சம் சுற்ற வேண்டும் என்று. அப்பா பாக்குகளை வெட்டி தாருங்கள் நான் விரைவாக வெற்றிலைக் கூறு சுற்றுகிறேன் என மகன் கூறினார். நான் வெற்றிக்கூறுகளை பையில் போட்டுக் கொண்டு வௌியேறும் போது மகனும் பின்னாலேயே வந்தார். பின்னர் நான் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். பின்னர் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்து மகனே என்று அழைத்த போது மகன் கதைக்க வில்லை. வழமையாக நான் வீட்டுக்கு வந்து மகனை அழைக்கும் போது எங்கிருந்தாலும் அப்பா என குரல் கொடுக்கும் பழக்கத்தை மகன் கொண்டிருந்தார். நான் அறைக்கு சென்று பார்த்தேன் அங்கு மகன் இருக்கவில்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் மகனின் கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்ற முற்பட்டேன். எனினும் என்னால் அதை செய்ய முடியவில்லை. 5 நிமிடங்களின் பின்னர் மகனை ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மகன் இறந்து விட்டார். என்றார்.
சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை திடீர் மரண பரிசோதகர் சுமேத குணவர்தன முன்னிலையில் இடம்பெறவுள்ளது.