அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் தேசிய திட்டத்திற்கமைய, Biometrics (உயிரியல் குறியீட்டு பாதுகாப்பு) உடன் கூடிய டிஜிட்டல் தேசிய அடையாள இலக்கத்தை 2023 க்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் விரும்புவதாகத் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அலங்கார மீன், உள்நாட்டு மீன் மற்றும் இறால் வளர்ப்பு, மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி, பல நாள் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்காக அமைச்சில் கொன்சியூலர் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் தற்போதைய நிலையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆரம்பத்தில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் தேசிய திட்டத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக் காட்டியதுடன், Biometrics (உயிரியல் குறியீட்டு பாதுகாப்பு) உடன் கூடிய டிஜிட்டல் தேசிய அடையாள இலக்கத்தை 2023 க்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்த டிஜிட்டல் அடையாள இலக்கம் ஒவ்வொரு பிரஜைக்கும் தனியாக குறிப்பிடத்தக்கதாக அமைவதுடன், பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை பொருந்தும் அதே வேளை, ஒரு பிரஜையின் செயற்பாட்டின் பல்வேறு பகுதிகளான வங்கிக் கணக்கு, வரிக் கோப்பு, காப்பீடு, கடவுச்சீட்டு மற்றும் பாடசாலைகளில் சேர்த்தல் ஆகியவற்றுக்கும் பொருந்தும். எனவே, ஏனைய துணை நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இந்த செயன்முறைக்கு இணையாக இருப்பது அவசியம் என அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் சேவைகளை பெருமளவான இலங்கையின் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதால், வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவினால் பயன்படுத்தப்படும் தற்போதைய மின்னணு ஆவணச் சான்று அமைப்பு (ஈ-டாஸ்) மேம்படுத்தப்பட்டு அல்லது ஒரு புதிய அமைப்பு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு விரைவானதாக இருக்க வேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் அதன் முகவர்களின் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எளிதாக்குவதற்காக, பொலிஸ் திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் போன்ற ஏனைய நிறுவனங்களுடன் கொன்சியூலர் பிரிவை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும்.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் ஓஷத சேனாநாயக்க குறிப்பிடுகையில், இந்த சிக்கல் முழுமையானதொரு முறையில் அணுகப்பட வேண்டியதுடன், ஒரு பிரஜையின் பார்வைக்கு அமைய, கிராமப்புறங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சேவை நாடுனர்கள் வருகை தருகின்றனர். எனவே, அத்தகைய சேவை நாடுனர்கர்கள் பௌதீக ரீதியாக வருகை தருவதனை முடிந்தவரை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். ஒற்றைக் கட்டண செலுத்துகை முறைமையை செயந்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் இந்த செயன்முறையை செயற்படுத்துவதற்கான செயற்பாட்டு முறைமையொன்றை உருவாக்குவதற்காக இடைமுகவர் குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரமைப்பு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.