முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காததன் ஊடாகக் கடமை தவறியமை உள்ளிட்ட தலா 855 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாமல் பலல்லே, ஆதித்யா பட்டபெதிகே மற்றும் மொஹமட் இர்சதீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் ஆயத்தினால் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான, சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், சாட்சியாளர்களாக 1,215 நபர்களை பெயரிட்டுள்ளார்.
இதன்படி, வழக்கு விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக நீதிபதிகள் ஆயம் அறிவித்துள்ளார்.