அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகள் பற்றிய தெளிவுபடுத்தல்!! ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் சிறப்பு அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகள் பற்றிய தெளிவுபடுத்தல்!! ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் சிறப்பு அறிக்கை!


அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.


அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகள் தொடர்பில், இன்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


"நாட்டின் தற்போதைய நிலமைக்கு மத்தியில், அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகளைப் போக்கி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினதும் அரசினதும் நிலைப்பாடு தொடர்பில் நாட்டுக்குத் தெளிவுபடுத்துவதற்கு, நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.


அரிசி, மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தொடர்பில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவருக்கிருக்கும் அதிகாரங்களுக்கமைய, பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அவசரகால விதிமுறைகளுக்கு உள்பட்ட அரசிதழ் அறிவித்தலொன்றை, கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று வெளியிட்டார் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும்.


மக்கள்மயப்பட்ட அரசு என்ற பொறுப்புணர்வுடன், பாவனையாளர் பெருமக்களைப் பாதுகாக்கும் பொருட்டே, ஜனாதிபதியினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.


அன்றாட வாழ்க்கை முறையை வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட நுகர்வுப் பொருள்களை விநியோகித்தல், அது தொடர்பான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதோடு, அவற்றை விரிவான கண்காணிப்புக்கு உட்படுத்தும் நோக்கிலேயே, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால விதிமுறைகள், கடந்த சில தினங்களுக்கு முன்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது அவை, 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில், முழு நாடும் அறியும்.


நாட்டில் நிலவும் கோவிட்-19 நிலமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதில், அரசு பெரும் சவாலை எதிர்நோக்கி வருகின்றது. அதற்காக, 500 பில்லியன் ரூபாய்க்கும் அதிக செலவுச் சுமையைச் சுமந்து வருகிறது.


பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையிலேயே இவ்வனைத்து விடயங்களையும் முன்னெடுத்துக்கொண்டு, ஜனாதிபதி தலைமையிலான அரசு, தற்போதைய நிலமைக்கு அர்ப்பணிப்புகளுடன் முகங்கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்குத் தேவையான தீர்மானங்களை எடுக்கும் போது, எந்தத் தரப்பினருக்கும் பக்கச்சார்பாக நடந்துகொள்ள, ஜனாதிபதி தயாராக இல்லை.


அரிசி தொடர்பில் நிலவும் பிரச்சினையை, அனைத்துத் தரப்பினருடன் இணக்கமாகத் தீர்த்துக்கொள்ளவே, ஆரம்பம் முதல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. விவசாயி, வர்த்தகரைப் போன்றே, நுகர்வோரையும் பாதுகாக்கும் நியாயமான முறைமையொன்றையே அரசு எதிர்பார்த்திருந்தது.


இது தொடர்பில், அரிசி ஆலை உரிமையாளர்களுடனும், ஜனாதிபதி விரிவாகக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது, இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன. பிரதமர் மகிந்த ராஜபக்சவும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களும்கூட, வர்த்தகர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.


விவசாயிகளைப் பலப்படுத்துவதற்காக, 30, 32 ரூபாய்க்குக் காணப்பட்ட தலா ஒரு கிலோ கிராம் நெல்லுக்குக் கட்டுப்பாட்டு விலையொன்றை அரசு நியமித்தது. அதன்படி, நாட்டரிசி மற்றும் பச்சையரிசி நெல் ஒரு கிலோ கிராமுக்கு 50 ரூபாயும் சம்பா நெல் ஒரு கிலோ கிராமுக்கு 52 ரூபாயும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராமுக்கு 55 ரூபாயும் என்ற அடிப்படையில், அந்தக் கட்டுப்பாட்டு விலை நியமிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், அந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு ஒருபோதும் ஈடாகாத வகையில், நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 125 ரூபாய், சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 150 ரூபாய் மற்றும் கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 225 ரூபாய் என்ற அடிப்படையில், சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டிருந்ததுடன், இதனால் நுகர்வோர் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


அதன் பின்னரே, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிகபட்ச நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக, பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் முழு அதிகாரங்களுடன், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரின் நியமனம் இடம்பெற்றது. இதன்படி, சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 103 ரூபாய், நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 98 ரூபாய், கீரி சம்பா ஒரு கிலோகிராம் 125 ரூபாய், பச்சையரிசி ஒரு கிலோகிராட் 95 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலைகள் நியமிக்கப்பட்டு, அவை அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டன.


நாடு எதிர்நோக்கியிருந்த சிக்கலை ஏற்றுக்கொண்ட வர்த்தகப் பெருமக்கள், அதன் பின்னர், அரசை சிரமத்துக்கு உள்ளாக்கப் போவதில்லை என்றும் இணைந்து பணியாற்றுவதாகவும், வெளிப்படையாக அறிவித்திருந்தமை உங்களுக்கு நினைவிருக்கும். இருப்பினும், அரசுடன் அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டை, துரதிர்ஷ்டவசமாக அவர்கள் மீறியுள்ளனர். அதேவேளை, பெரியளவில் அரிசி ஆலைகளை நடத்திவரும் அரிசி ஆலை உரிமையாளர்களின் நாளாந்த உற்பத்திகள் மற்றும் விநியோகங்களும், 50 சதவீதத்துக்கும் குறைந்தளவில் வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டன.


கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நுகர்வோர் பெருமக்களால், இந்த நிலமையையும் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளமையையும் அவர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளமையையும், அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.


அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 2021 செப்ரெம்பர் 8ஆம் திகதி மாத்திரம், பெரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைக் களஞ்சியசாலைகளிலிருந்து, அரசின் கட்டுப்பாட்டு விலையின் கீழ், 8 லட்சத்து 7 ஆயிரத்து 375 கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டு, சதொச கூட்டுறவு விற்பனை நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


பெரியளவில் நெல் களஞ்சியசாலைகளை நடத்தும் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, அரசி மாஃபியாவில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டிய நபர்கள், தற்போது அவர்களைப் பாதுகாப்பதற்காக முன்வந்திருப்பதன் மூலம், இந்த அனைத்துச் செயற்பாடுகளின் பின்னால் காணப்படும் அரசியலை, உங்களால் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.


எவ்வாறெனினும், பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்காக மக்கள் வழங்கிய ஆணை மற்றும் நம்பிக்கை போன்றவற்றைப் பாதுகாத்து, மக்களின் நலனுக்காக, ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களின் பிரகாரம் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள்மயப்பட்ட பொருளாதாரம், சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதே, ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்"  தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.