கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக புகார்கள் உள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் உள்பட பலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையில் உள்ளார்.
இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் இதுபோன்ற பல மோசடி நிகழ்வுகளில் ஈடுபட்டு சுகேஷ் சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லி அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து பெங்களூருவில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னை - கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ. 82 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரது பங்களாவுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கிடையில், 200 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்ததாக சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான பண மோசடி வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீட்டித்து வரும் இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரின் பணமோசடி குறித்த பல்வேறு தகவல்களை நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-இந்திய ஊடகம்