2004 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் வரலாறு மற்றும் சாதனைகள்!

2004 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் வரலாறு மற்றும் சாதனைகள்!

2004 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட  அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது (All University Muslim Student Association - AumsA), இன்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட 16 தேசிய பல்கலைக்கழகங்களை
அடிப்படையாகக் கொண்ட 26 பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களை அங்கத்துவ அமைப்புக்களாக கொண்டுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 20 இற்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகள் அமைப்புக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்பட்டடு வருகின்ற மிகவும் பிரம்மாண்டமான சாம்ராஜ்யம் ஒன்றாக இன்று வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த அமைப்பானது, முஸ்லிம் இளங்கலை பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலங்களில் இருந்தே ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒருமித்து இயங்க வேண்டும் என்ற சிந்தனையுடன் 1973 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட சர்வ வளாக முஸ்லிம் மஜ்லிஸை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிட முடியும். இக்காலத்தில் இளங்கலை பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ள பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்ததுச் செல்லும் நோக்கிலான ஒருமித்த சிந்தனையைக் கொண்டிருந்தனர். 

அதே சிந்தனையின் அடிப்படையிலே தான் 2004 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட  அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமும் இன்று இயங்கி வருகின்றது. 

2004 ஆம் ஆண்டினைத் தொடர்ந்து வந்த காலங்களிலும் முஸ்லிம் மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் AUMSAவின் நிர்வாக உறுப்பினர்களால் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது. இன்று AumsAவானது, அனைத்து பல்கலைக்கழகங்களினதும் முஸ்லிம் மாணவர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன், பல்வேறு சமூக நல செயற்பாடுகளையும் மேற்கொண்டு சமூகத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

2004 ஆம் ஆண்டிற்கு பின்னரான காலப்பகுதிகளிலும் AumsA பல்வேறு தங்குதடைகளைத் தாண்டி பல இளங்கலைப் பட்டதாரிகளின் முயற்சியால் சிறப்பாக இயங்கியது. அதில் குறிப்பாக, 2014ம் ஆண்டுகளில் கொழும்புப் பிராந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறைகள் மேற்கொள்ளப்பட்டமையையும், அதனையடுத்து 2015ம் ஆண்டில் அனைத்து முஸ்லிம் மஜ்லிஸ்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும், பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியிலான கருத்தரங்குகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தொழில் சார் வழிகாட்டல்களும்  நடாத்தப்பட்டமை பற்றியும் குறிப்பிடலாம். மேலும் 2016ம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தேசிய ரீதியிலான கருத்தரங்குகளும்  நடாத்தப்பட்டன. மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இலங்கை நிர்வாக சேவை (SLAS) வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்களும், பல்கலைக்கழக மாணவர்களுக்கான மூன்று நாள் பயிற்சிப்பட்டறைகளும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் (ACJU) இணைந்து இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளும் இக்காலப் பகுதியில் நடாத்தப்பட்டன. 

தொடர்ந்து 2017ஆம் ஆண்டுகளில்,  அனைத்து முஸ்லிம் மஜ்லிஸ்களையும் ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள், பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியிலான கருத்தரங்குகள், வழிகாட்டல்கள் மற்றும் தொழில் சார் வழிகாட்டல் செயற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்பட்டன. 2018ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் அதற்கு முன்னைய காலப்பகுதிகளைப் போன்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சுமார் ஆறு மாத காலப்பகுதியே இந்த நிர்வாகம் செயற்பட்டது.

அதன்பின், 2019 ஆம் ஆண்டுகளில், பிரதானமாக AumsAவை வலுப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு  பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான தலைமைத்துவ வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டமான “அரோரா”, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு “Spade to Shade” மர நடுகை செயற்திட்டம், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலமையின் போது FOCUS அமைப்புடனான கூட்டு அறிக்கை வெளியீடு, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு (IUSF) மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக பௌத்தர் அமைப்பு (IUBF) உடனான கலந்துரையாடல்கள், AumsA வின் பெண்கள் பிரிவை மீள் உருவாக்குவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு தேசிய கட்டுரைப் போட்டி செயற்றிட்டமும்  முன்னெடுக்கப்பட்டது. 

அத்துடன் பகிடிவதைக்கு எதிரான அறிக்கையொன்றும் இக்காலப்பகுதியில் வெளியிடப்பட்டது. மேலும் இக்காலப் பகுதியில் அனைத்து முஸ்லிம் மஜ்லிஸ்களையும் ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள்,பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியிலான கருத்தரங்குகள் மற்றும் வழிகாட்டல் செயற்பாடுகள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டு AumsA சிறப்பான முறையில் இயங்கியது. இவ்வாறாக AumsAவின் ஆரம்பகால செயற்பாடுகள் ஒவ்வொரு ஆண்டு நிர்வாகத்தினாலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு 28.12.2019 ஆம் திகதி NAAS கலாசார மையம், கொடிகாவத்தையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை,தேசிய ஷுரா சபை) ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகிய இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள், சர்வ வளாக முஸ்லிம் மஜ்லிஸின் முன்னாள் தலைவர்கள், AumsAவின் முன்னாள் தலைவர்கள்,மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ்களின் தலைவர்களோடு
20 இற்கும் மேற்பட்ட  முஸ்லிம் மஜ்லிஸ்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 200கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகளும் கலந்து கொண்டனர்.

2020ஆம் ஆண்டுக்கான AumsAவின் தலைவராக களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சகோதரர் அஹ்மத் ஸாதிக்  அவர்களும் செயலாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்த  சகோதரர் எல்.எம். சாஜித் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். மேலும் பெண்கள் பிரிவின் தலைவியாக கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சகோதரி எம்.எம். முபஷ்ஷரா பேகம் அவர்களும் செயலாளராக இலங்கை சட்ட கல்லூரியை சேர்ந்த சகோதரி மர்ஷதா மக்கீ அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் முழு அமைப்பினதும் பிரதி தலைவி மற்றும் உதவி செயலாளராக செயற்படுபவர்களாவர்.

இக்காலப்பகுதியானது AumsAவினுடைய துரித வளர்ச்சிக் காலமாக கருதப்படுகின்றது. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட 16 தேசிய பல்கலைக்கழகங்களை
அடிப்படையாகக் கொண்டு 26 பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்கள், அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் அங்கத்துவ அமைப்புக்களாக இருப்பதுடன் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 20 இற்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகள் அமைப்புக்களும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்ற மிகவும் பிரம்மாண்டமான சாம்ராஜ்யமாக AumsA வளர்ச்சி அடைந்திருப்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமே. அத்தோடு இதன்  நிர்வாகக் குழுவின் தலைவர் செயலாளர் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பதவிகளிலும் பெண்களுக்கான சம அங்கத்துவமானது உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதைக்  குறிப்பிடலாம். மேலும்  இவ்வமைப்பானது வெறுமனே நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்கின்ற அமைப்பொன்றாக  அல்லாமல் இலங்கையில் இருக்கின்ற அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம்  மாணவர்களையும் ஒன்றிணைக்கும் மையமாக செயற்படுகின்றது. இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா (ACJU), தேசிய ஷுரா சபை (NSC), ஶ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் (MCSL), முஸ்லிம் இளைஞர்கள் சம்மேளனம்  (YMMA), இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் (SLMMF) போன்ற தேசிய அமைப்புக்களுடன் கைகோர்த்து அனைத்து பல்கலைக்கழங்களிலுமுள்ள மாணவர்களுக்கு பிரயோசனம் அளிக்கக்கூடிய செயற்பாடுகளான கல்விக்கு மேலதிகமான கலை, கலாசாரம் மற்றும் தலைமைத்துவம் என்பவற்றை மேலோங்கச் செய்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டது. 

அத்தோடு கொவிட்-19 அசாதாரண காலப்பகுதியில் தேசிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களையும் அடிப்படையாக வைத்து பிரதானமான ஐந்து  திட்டங்களை நடைமுறைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

அவற்றுள்,

1. 1000 இற்கும் மேற்பட்ட ஆண்,பெண் இளங்கலை பட்டதாரிகளைக் கொண்ட தன்னார்வலர் குழு  உருவாக்கப்பட்டமை.
2. E-Study எனும் இணையவழி கற்பித்தல் செயற்பாடு இளங்கலை பட்டதாரிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. 
3. உணவுப் பற்றாக்குறையை தீர்க்கும் முகமாக 1000 வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை திட்டத்தினை தேசிய ஷுரா சபையுடன் (NSC) இணைந்து மேற்கொண்டது. 
4. பல்கலைக்கழக மாணவர்களது எழுத்தாற்றலை மேம்படுத்தும் முகமாக “வழித்தடம்” எனும் ஆய்வு கட்டுரைகளை எழுதும் களத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதில் மிகச் சிறந்த கட்டுரைகளாக தெரிவு செய்யப்படுபவை பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டன. 

5. நடைமுறை பிரச்சினைகளுக்கு ஏற்ற தலைப்புக்களை உள்ளடக்கியதாக  10 இற்கும் மேற்பட்ட அமர்வுகளை கொண்ட "இணையவழி செயலமர்வுத்  தொடர்" (Online Webinar series) மேற்கொள்ளப்பட்டது. 
இச் செயலமர்வுத் தொடரானது பல உலமாக்களையும் கல்விமான்களையும் கொண்டு மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் பட்டப்பின் படிப்பு வழிகாட்டல் தொடர்கள் (Post Graduate Guidance series), போன்ற அனைத்து செயலமர்வுகளும் மிகவும் பயனளிக்கும் வகையில் அமைந்ததுடன் மிகுந்த வரவேற்பையும் பெற்றன.

மேலும் பிரதானமான விடயமாக பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களை அடிப்படையாக வைத்து நாட்டில் ஏற்படுகின்றன நடைமுறைப் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு 9 விடயங்களை உள்ளடக்கிய AumsAவின் கொள்கை அறிக்கை (Policy Statement) இக்காலப் பகுதியிலேயே வெளியிடப்பட்டது. AumsAவின் இந்த கொள்கைகளுக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களாளும், சமூகத்தினராலும் பெரும் வரவேற்பு கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் பகிடி வதைக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கையை தற்போதைய நிர்வாகமும் (2020) மீள்வெளியிட்டு பகிடி வதைக்கான கடுமையான எதிர்ப்பைக் காட்டியது. 1973, 2004 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சர்வ வளாக முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்புக்களுக்கு நிலையானதொரு அரசியலமைப்பு இல்லாத நிலையில், 2020 ஆம் ஆண்டிற்குரிய நிர்வாகக் குழுவினால் முதன்முதலில் AumsAவிற்கென்றே பூரணமான ஒரு அரசியலமைப்பு பல எதிர்கால விடயங்களையும் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டது. 

மேலும் பலமிழந்திருந்த பிராந்தியங்களிலுள்ள பல்கலைக்கழகங்களை ஒன்றிணைத்து தலைமைத்துவ நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.இதற்குச் சான்றாக கல்முனையில் இடம்பெற்ற 
நிர்வாக சபை மற்றும் ஆலோசனை சபை சந்திப்பினை குறிப்பிடலாம். 

அத்தோடு இக்காலப் பகுதியில் AumsAவின் ஊடகத்துறையில் பிரம்மாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது. தொலைக்காட்சி, வானொலி நேர்காணல்கள் மற்றும் பத்திரிகைகளின் ஊடாகவும் AumsAவின் செயற்பாடுகள் பகிரங்கப் படுத்தப்பட்டதுடன் நாடு பூராகவும் பரவலடையச் செய்யப்பட்டன.
மேலும் பல்கலைக்கழக முஸ்லிம் இளங்கலை பட்டதாரிகளின் தரவுகள், திரட்டப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, மீள் கையாளுவதற்கும் மாணவர் - பல்கலைக்கழக நுழைவு விகிதங்களை கண்காணிப்பதற்கும் ஏற்ற விதத்தில் “தரவு சேகரிப்பு” (Data collection) என்னும் செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. முஸ்லிம் மாணவர்களது பல்கலைக்கழக நுழைவினை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் 2020 இல் AumsAவினால் மேற்கொள்ளப்பட்ட தேசிய செயற்பாடுகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

“Spade to Shade” எனும் AumsAவின் வழமையான மரநடுகை செயற்திட்டமானது 2020,2021 ஆம் ஆண்டுகளிலும் இடம்பெற்றது.அத்தோடு“முஸாபஹதுல் புர்கான்” எனும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கிராஅத் போட்டி நிகழ்ச்சியொன்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் (ACJU) இணைந்து நடாத்தப்பட்டது,பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களின் வரலாற்றை தொகுக்கும் முகமாக “ஹிஸ்டோரியா” எனும் போட்டி நிகழ்ச்சியொன்றையும் நடாத்துவதற்கான செயற்பாடுகள் இக்காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன என்பதை நினைவுபடுத்துவது பொருத்தமாகும். மேலும்"Bright path" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டல் நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகளும் நடாத்தப்பட்டன.

மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உயர் கல்வி தொடர்பான வழிகாட்டல்கள், தலைமைத்துவம், சமூக விழிப்புணர்வுகள் மற்றும் ஆண்,பெண் ஆளுமைகள் போன்ற நிகழ்வுகளை காலத்துக்குக் காலம் நடாத்துமாறும் AumsA முஸ்லிம் மஜ்லிஸ்களுக்கு வழி காட்டியதோடு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மஜ்லிஸ்களின் செயற்பாடுகளை AumsAவின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரவும் செய்தது.

இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் நாடு பூராகவும் உள்ள இளங்கலை பட்டதாரிகளை சென்றடையும் வகையில் AumsAவினால் உருவாக்கப்பட்டுள்ள இளங்கலை பட்டதாரிகளைக் கொண்ட வலைபின்னல் பற்றி குறிப்பிடுவது அவசியமாகும். நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் 5 பிராந்தியங்களுக்குள் உள்ளடக்கப்பட்டு ஒவ்வொரு பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய ஒருங்கினைப்பாளர்களைக் கொண்டு ஆண்களுக்கும் பெண்களுக்குமென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) குழுமங்களின் ஊடாக AumsAவின் இச் செயற்பாடுகள் பல்கலைக்கழக மாணவர்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும் AumsA மீடியா எனும் யூடியூப் சேனலின் (YouTube Channel) ஊடாக AumsAவினால் வெளியிடப்படுகின்ற கானொளிகளை பார்வையிடும் வகையிலும், https://www.facebook.com/slaumsa/ எனும் முகநூல் பக்கத்தினூடாக AumsAவின் செயற்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையிலும் இதன் வலைபின்னல் விரிவாக்கப்பட்டுள்ளது. ஏதேனுமொரு  பல்கலைக்கழகம் அல்லது இளங்கலைப்பட்டதாரிகள் அமைப்பினால் செயற்படுத்தப்படுகின்ற ஒரு செயற்றிட்டத்தை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களையும் இளங்கலைபட்டதாரிகளையும் சென்றடையச் செய்யும் ஒரு மையமாகவும் AumsA விளங்குகின்றது என்றால் மிகையாகாது.

மேலும் இவ்வகையான நிகழ்வுகளை காலத்துக்குக் காலம் நடாத்துமாறும் AumsA முஸ்லிம் மஜ்லிஸ்களுக்கு வழி காட்டியது.

39 நிர்வாக அங்கத்தவர்களைக் கொண்ட (2020-2021) இந்த அமைப்புடன் தற்போது சுமார் 26 முஸ்லிம் மஜ்லிஸ்களும், 20இற்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகள் அமைப்புக்களும் ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

மேலும் AumsA இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பல துறைகளையும் சார்ந்த 9000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கி வருகின்றது.  எதிர்காலத்திலும் இதன் பயணம் தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.