ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமி தீக்காயங்களுடன் மீட்பு!

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமி தீக்காயங்களுடன் மீட்பு!


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த 16 வயதான சிறுமியொருவர் பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரின் உடலில் தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அக்கரபத்தனை, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதான மேற்படி சிறுமி சுமார் 07 மாதங்களுக்கு முன்னதாக தரகர் ஒருவரின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவரது உறவினர்கள் எமது செய்திப்பிரிவுக்கு அளித்த தகவலுக்கமைய, சிறுமி தொழிலுக்கு சென்றதன் பின்னர், ஒரு தடவைக்கூட அவரை சந்திப்பதற்கு அவர் பணியாற்றிய வீட்டார் அனுமதித்திருக்கவில்லை. 

எனினும், அவர் மாதாந்தம் வீட்டுக்கு, பணம் அனுப்பிவந்ததுடன், அவ்வப்போது தொலைபேசி ஊடாகவும் வீட்டாருடன் பேசியுள்ளார். 

இறுதியாக வீட்டாருடன் தொலைபேசியில் பேசியபோது, அவ்வீட்டில் பணிபுரியும் சாரதி ஒருவர் தன்னை தாக்கினார் என அவர் கூறியதாக சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், நேற்றுமுன்தினம் குறித்த சிறுமி நுளம்பு சுருள் ஒன்றை பற்ற வைக்க சென்றிருந்தபோதே, உடலில் தீப்பற்றியுள்ளதாகவும், அதன் பின்னர் அவரை மீட்டு, தாம் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டார் தெரிவித்ததாக சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார். 

எனினும், தாம் அவ்வீட்டுக்கு சென்று பார்த்தபோது, குறித்த சிறுமி இருந்ததாகக் கூறப்படும் வீட்டில் வெறெந்த பொருளும் தீப்பற்றியிருக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் தொடர்பில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கோரியுள்ளனர். 

இதேவேளை, சிறுமியின் உடலில், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பகுதி தீயினால் எரிந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுவருவதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மடவளை நியூஸ்

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.