எச்சரிக்கை : சிறுவர்கள் மத்தியில் பரவும் புதியவகை நோய் - கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை!

எச்சரிக்கை : சிறுவர்கள் மத்தியில் பரவும் புதியவகை நோய் - கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களைத் தாக்கும் புதியவகை நோயொன்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் பலரும் இந்த நோயினால் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு காணப்படுவதால் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியநிபுணர் நளின் கிதுல்வத்த பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அண்மைக்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுடன் சம்பந்தப்பட்டதாகப் பரவிவரும் மற்றுமொரு நோய் தொடர்பில் அனைவரும் அறிந்திருப்பதும் அவதானத்துடன் செயற்படுவதும் அவசியமாகும்.

இது சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்நிலைமையாக இருப்பதுடன் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகி 2 - 6 வாரங்கள் கடந்ததன் பின்னர் சிறுவர்களுக்கு இந்தநோய் ஏற்படக்கூடும்.

சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதை அறியாதபோதுகூட, அந்தப் பிள்ளைகள் இந்த நோயினால் பாதிக்கப்படலாம் என்பதே இதிலுள்ள சிக்கலான விடயமாகும்.

இந்த நோயினால் பீடிக்கப்பட்ட 6 சிறுவர்கள் இப்போது அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த சிறுவர்கள் பெரும்பாலும் 8 - 15 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட சிறுவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் ராகம வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை மற்றும் கொழும்பிற்கு வெளியே உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றார்கள்.

மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில் இது புதியதொரு நோய் என்பதுடன், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் லண்டனிலேயே முதன்முதலில் இந்த நோய் இனங்காணப்பட்டது. அந்த நோயினால் இப்போது இலங்கைப்பிரஜைகளும் பாதிப்படைந்து வருகிறார்கள். நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் இந்நோயினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

காய்ச்சல், கடுமையான உடல்வலி, வயிற்றுவலி, வாந்தி, வயிற்றோட்டம் போன்றவையே இந்த நோய் ஏற்படுள்ளமைக்கான பொதுவான அறிகுறிகளாகும். இந்த நோய்க்குள்ளாகும் சிறுவர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தாலும் கூட, அறிகுறிகள் எவையும் தென்படாததன் காரணமாக பெற்றோர்கள் அதுகுறித்து அறியாமல் இருக்கலாம்.

அதேவேளை கண் சிவப்பாதல், உடலில் வீக்கங்கள் ஏற்படல் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்பட்டு, இந்நோய் இருதயத்தைத் தாக்கக்கூடும் என்பதால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

ஆகவே தமது பிள்ளைகளுக்கு இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும். அதனைத் தாமதிப்பதன் விளைவாகத் தமது பிள்ளையின் உயிர் மென்மேலும் அச்சுறுத்தலுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களைத் தாக்கும் கவசாகி நோய்த்தொற்றை ஒத்த புதியதொரு நோய் கண்டறியப்பட்டிருப்பதாக ஏற்கனவே தொற்றுநோய்கள் மற்றும் தொற்றாநோய்கள் தொடர்பான விசேட வைத்தியநிபுணர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.