பகிடிவதையற்ற பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புவோம்! பகிடிவதை தொடர்பில் AUMSA வின் நிலைப்பாடு! -பஸ்லுல் பாரிஸா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பகிடிவதையற்ற பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புவோம்! பகிடிவதை தொடர்பில் AUMSA வின் நிலைப்பாடு! -பஸ்லுல் பாரிஸா


பகிடிவதை (Ragging)  என்பது பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் புதிதாக உள்வாங்கப்படும் மாணவர்களை பழைய மாணவர்கள் அத்துமீறி செயற்பட்டு பல்வேறு செயற்பாடுகளை நிறைவேற்றும் படி வற்புறுத்துவதாகும். இப்பகிடிவதையானது பேச்சு ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் மேல் வகுப்பு மாணவர்களால் கீழ் நிலை மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றது. 


ஆரம்ப காலத்தில் புதியவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டபோதும் காலப்போக்கில் இது வன்முறைச் செயற்பாடுகளுக்கு வித்திட்டது‌. பொதுவாக இப் பகிடிவதைக்காலம் ஆறு மாதம் தொடக்கம் ஒரு வருடம் வரை நீடிக்கின்றது. இக் காலத்தில் மேனிலை மாணவர்கள் புதுமுக மாணவர்களை பல்வேறு வரையறைகளை விதித்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பதை அவதானிக்கலாம். இக் காலகட்டத்தில் விதிக்கப்படும் அதீத கட்டுப்பாடுகள் மாணவர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்கின்றது. 


மாணவர்களை நல்வழிப்படுத்த மேற்கொள்ளப்படும் வரையறைகளை தவிர்த்து மாணவர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்யும் நிலைக்கு மேல்நிலை மாணவர்களால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளும் வன்முறைச் செயற்பாடுகளும் பகிடிவதைக்குள் அடங்குகின்றன. 


இவ்வாறான அடக்கு முறைகளால் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை இடைநடுவே நிறுத்த முயற்சிப்பதுடன்  தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்ளவும் முனைகின்றனர்.


பகிடிவதையின் கோரத்தின் காரணமாக 2011 இல் உருகுனைப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் முடக்க நோய்க்கு உட்பட்டார். அத்தோடு 2015 ஆண்டு இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியான அமாலி சதுரிக்கா  தற்கொலை செய்து கொண்டார். மேலும் 1997ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் மாணவரான செல்வ விநாயகம் வரப்பிரகாசு கடுமையான பகிடிவதை காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 


மேற்படி நிகழ்வுகள் பகிடிவதையினால் ஏற்பட்ட ஒரு சில துக்ககரமான  சம்பவங்களாகும்.  இந்நிலை நீக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்கவும் மாணவர் ஒன்றியமும் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டும் கண்டனங்களை தெரிவித்தும் பகிடிவதை ஒழிப்புக்கான கோஷங்களை வெளியிட்டு வருகின்றன. 


பகிடிவதை மேற்கொண்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதித்தும் பல்கலைக்கழத்திலிருந்து முற்றாக இடைநிறுத்தியும் தண்டப்பணம் அறவிட்டும் பகிடிவதைக்கான எதிர்ப்பை வெளிக்காடாடிய போதும் இன்றும் பகிடிவதை தொடர்ந்து கொண்டிருப்பது கவலையான விடயமாகும்.


இப்பகிடிவதையை எதிர்ப்பதற்கான அறிக்கைகளை அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது (AUMSA)‌ வெளியிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது 2019.03.31 அன்று பகிடிவதை தொடர்பான நினைவூட்டல் அறிக்கையொன்றை வெளியிட்டது.


இவ் அறிக்கையின் படி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களை ஒருங்கிணைத்து செயற்படும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது (AUMSA) பகிடிவதை தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளது. "ஒரு சிரேஷ்ட மாணவர் கனிஷ்ட மாணவரை உடல் அல்லது உள ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக எந்த ஒரு விடயத்தை செய்தாலோ, ஒரு மாணவர் இன்னொரு மாணவரை வற்புறுத்தி ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என திணித்தாலோ, அந்த விடயங்களுக்கும் அப் பாதிப்பை ஏற்படுத்திய மாணவருக்கும் AUMSA ஆதரவாக இருக்காது என்றும், பாதிக்கப்பட்ட மாணவருக்கு AUMSA குரல் கொடுக்கும் என்றும்  AUMSA நிறைவேற்று மற்றும் ஆலோசனை குழு கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது." 


இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதன் நோக்கம் மாணவர்கள் அனைவரும் தமது உரிமையான கல்வி கற்கும் உரிமையை சுதந்திரமாக பெற வேண்டும் என்பதாகும். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் மேற்படி அறிக்கைகளுக்கு ஏற்று அதற்கான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும்.


ஆகவே பகிடிவதை செயற்பாடுகளை எம்மத்தியில் இருந்து நீக்கி சுமுகமான பல்கலைக்கழக சூழலை புதுமுக மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். இதுவே எமது மார்க்கத்திற்கும், நாம் இதுவரை பெற்ற கல்விக்கும், எம்மை உயர்த்தி விட்ட சமூகத்திற்கும் கொடுக்கும் உச்சபட்ச கௌரவம் என்பதை மனதிற் கொண்டு  நாம் அனைவரும் செயற்படுவோமாக!


M.A. பஸ்லுல் பாரிஸா

South Eastern University of Sri Lanka 

"வழித்தடம்" - All University Muslim Student Association


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.