BREAKING: ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்த இணக்கப்பாடு வெற்றியளித்துள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்த இணக்கப்பாடு வெற்றியளித்துள்ளது!


இஸ்ரேலுடன் யுத்த நிறுத்த இணக்கப்பாட்டை எட்ட முடியும் என ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அதிகாரியொருவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.


எல்லை தாண்டிய தாக்குதல்களில் இரண்டு தரப்பும் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் இஸ்ரேலிய குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழல் உருவாக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இன்று (21) இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


காஸாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது.  ஆனால், நேரம் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


அதேநேரம், நேற்று வியாழக்கிழமையும் இஸ்ரேலின் யுத்த விமானங்கள் காஸா நிலப்பரப்பில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் பலஸ்தீனியர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 227 ஆக உயர்வடைந்துள்ளது.


கடந்த 11 நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் 64 பலஸ்தீன சிறுவர்களும் பலியாகியுள்ள அதேவேளை இஸ்ரேல் தரப்பில் 12 பேர் இதுவரை பலியாகினர். 


காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தின் உட்கட்டமைப்புக்களை இலக்குவைத்து 100 தாக்குதல்களை இஸ்ரேல் விமானப் படையினர் நடத்தியுள்ளனர். காஸாவின் கரையோரப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாற்று திறனாளி ஒருவரும் அவரது மனைவியான கர்ப்பிணிப் பெண் மற்றும் 03 வயது குழந்தை ஆகியோர் பலியாகியுள்ளனர்.


அத்துடன் காஸா நோக்கி இஸ்ரேல் நடத்திய உந்துகணைத் தாக்குதல்களில் நான்கு சிறுவர்கள் உட்பட பல பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இந்த விமானத் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் நோக்கி ஹமாஸ் இயக்கமும் உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 


நேற்றைய முன்தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹுவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், யுத்த நிறுத்தத்தை நோக்கிய நடவடிக்கையில் மோதல்களை குறிப்பிடத்தக்க அளவால் குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.


எனினும் ஜோ பைடனுடன் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்று ஒரு சில மணித்தியாலங்களில் கருத்து வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர், தமது இலக்கு எட்டப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என அறிவித்திருந்தார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் முயற்சியும் முடங்கியிருந்தது.


இந்த விடயத்தில் அமெரிக்கா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு கோரும் தீர்மானங்களை தடுத்து நிறுத்தி வந்தது. எனினும் இருதரப்பிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என யுத்த நிறுத்தப் பேச்சுக்களில் ஈடுபடும் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி த வோல் ஸரீட் ஜேனல் செய்தி வெளியிட்டுள்ளது.


ஹமாஸ் இயக்க தலைமையுடன் எகிப்து அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ள அதேவேளை இஸ்ரேலிய இராணுவமும் தமது நோக்கங்களை நிறைவு செய்யும் கட்டத்தை எட்டியுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையிலே யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றியளிக்கும் என நம்புவதாக ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அதிகாரியான மூசா அபு மார்சூக் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.