சுகாதர வழிமுறைகளுடன் அமைதியான முறையில் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடிய முஸ்லிம்கள்!

சுகாதர வழிமுறைகளுடன் அமைதியான முறையில் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடிய முஸ்லிம்கள்!

நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது வீடுகளுக்குள்ளேயே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு அமைதியான முறையில் இம்முறை ரமழான் பண்டிகையை இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டாடினார்கள்.

அத்துடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, நாடு மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் இறைவனிடம் கேட்டுக்கொண்டனர்.

‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு புனித பெருநாள் விழா. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு.

அதில் ஒன்று, ரமழான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமழான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது. முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்தவகையில் வழமையாக பள்ளிவாசல்களில் காலைவேளையில் விசேட தொழுகைகள் நடைபெறும். நாட்டில் அனைத்து நகரங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம் மக்கள் அணிதிரள்வார்கள்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக பயணத்தடை இம்முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றியே நிகழ்வுகள் நடத்துவதற்கு கட்டுப்பாட்டுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் வீட்டுக்குள் இருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு பெருநாளை அமைதியாகக் கொண்டாடினர்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.