பூமியில் விழப்போகும் சீன ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம்! யாருக்கு ஆபத்து?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பூமியில் விழப்போகும் சீன ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம்! யாருக்கு ஆபத்து?

சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம் ஒன்று பூமியின் மீது விழப் போகிறது. இதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


18 டன் எடை கொண்ட இந்தப் பாகம் கடந்த பல தசாப்தங்களில் பூமி மீது கட்டுப்பாடில்லாமல் விழப்போகும் மிகப்பெரிய பொருளாகும்.


தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் சீனா லாங் மார்ச் - 5B என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இதன் பணி நிறைவடைந்துவிட்டாலும், இந்த ராக்கெட்டின் பாகம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.


இந்தப் பாகம் பூமியை நோக்கி வரும் பாதையை உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் இப்போதைக்கு அதைச் சுட்டுத் தள்ளும் எந்தத் திட்டமும் இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


"யாருக்கும் ஆபத்தில்லாத பகுதியில் ராக்கெட்டின் பாகம் விழும் என நம்புகிறோம். கடலிலோ அல்லது அதைப் போன்ற வேறு இடத்திலோ விழக்கூடும்" என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்தார்.


கிரீன்விச் நேரப்படி சனிக்கிழமை இரவிலோ ஞாயிற்றுக்கிழமை காலையிலோ ராக்கெட் பாகம் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும் என பல நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். ஆயினும் இந்தக் கணிப்புகள் அனைத்தும் உறுதியானவை அல்ல.


பூமியைச் சுற்றி 160 கிலோ மீட்டர் சிற்றச்சு நீளமும் 375 கிலோ மீட்டர் நெட்டச்சு நீளமும் கொண்ட நீள்வட்டப் பாதையில் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி லாங் மார்ச் - 5பி ராக்கெட் செலுத்தப்பட்டது. ராக்கெட்டின் முக்கியப் பகுதி மட்டும் அந்த வட்டப் பாதையில் கொண்டு சேர்க்கப்பட்டது. அப்போதிருந்தே பூமியில் இருந்து ராக்கெட்டின் பாகம் இருக்கும் தொலைவு குறைந்து கொண்டே வந்திருக்கிறது.


பூமிக்கும் ராக்கெட்டின் பாகத்துக்குமான தொலைவு குறைவதற்கு அங்கிருக்கும் காற்றின் அடர்த்தி உள்ளிட்ட காரணங்கள் இருக்கக்கூடும். ஆயினும் அவை பற்றிய போதுமான தகவல்கள் இல்லை.


விண்ணில் இருந்து பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும்போது பெரும்பாலான பொருள்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் ராக்கெட்டின் பாகம் அதிக உருகுநிலை கொண்ட உலோகங்களால் செய்யப்பட்டது என்பதால், காற்று மண்டலத்தைக் கடந்து வரக்கூடிய ஆபத்தும் உள்ளது.


ராக்கெட்டின் பாகம் எங்கே விழும்?



ஓராண்டுக்கு முன்பு இதேபோன்ற சீன ராக்கெட்டின் முக்கியப் பாகம் பூமியை நோக்கி வந்தபோது, அதில் இருந்ததாகக் கருப்படும் ஒரு குழாய் ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டில் கிடைத்தது.


விண்வெளியில் இருந்து வரும் ஒரு பொருள் பூமியில் வாழும் மனிதர்கள் மீது விழுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு. ஏனெனில் பூமியில் பெரும்பகுதி கடல். நிலப் பகுதியிலும் மக்கள் இல்லாத பகுதி அதிகம்.


ராக்கெட்டின் பாகம் பூமத்திய ரேகையில் இருந்து 41.5 டிகிரி சாய்வாக நகர்ந்து வருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் பூமியின் தெற்கு அட்சரேகைக்கு 41.5 டிகிரிக்கு தெற்கேயும், வடக்கு அட்ச ரேகைக்கு 41.5 டிகிரிக்கு வடக்கேயும் எந்தப் பாதிப்பும் இல்லை. இதற்கு இடைப்பட்ட பகுதியில்தான் அந்தப் பாகம் விழ வேண்டும்.



ராக்கெட் விழும் என விஞ்ஞானிகள் கணித்திருக்கும் பகுதி!


இவ்வளவு பெரிய பாகம் பூமியில் கட்டுப்பாடில்லாமல் விழ நேர்ந்ததற்கு அலட்சியமே காரணம் என்ற கூற்றை சீனா விமர்சிக்கிறது. பூமியில் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற மேற்கு நாடுகளின் எச்சரிக்கையை "மிகைப்படுத்தப்பட்டது" என்று கூறும் சீனாவின் அரசு இதழ், அது கடலில் எங்கேயாவது விழும் என்று கணித்திருக்கிறது.


எந்தப் பாதிப்பும் ஏற்படாதிருக்கும் வகையில் சீனாவின் விண்வெளிக் கண்காணிப்பகம் உற்று நோக்கி வருவதாக விண்வெளி நிபுணர் சோங் ஷோங்பிங் கூறியதாக தி குளோபல் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.


ஆனால் விண்வெளி நடவடிக்கைகள் குறித்துப் பட்டியலிடும் ஹார்வார்டு - ஸ்மித்சோனியன் மையத்தைச் சேர்ந்த பிரபல நிபுணரான ஜோனாதன் மெக்டவல் எதிர்மறையாகக் குறிப்பிடுகிறார்.


"இது உண்மையில் அலட்சியத்தின் விளைவாகவே பார்க்கப்படுகிறது" என்று பிபிசியிடம் அவர் கூறினார்.


"இது இதுபோன்ற ராக்கெட்டின் இரண்டாவது பயணம்; இதற்கு முன்னர் ஏவப்பட்டபோது ஐவரி கோஸ்ட் நாட்டில் ராக்கெட்டின் பாகங்கள் விழுந்தன. இந்த இரு நிகழ்வுகள்தான் 1979-ஆம் ஆண்டு ஸ்கைலேப் பூமியில் விழுந்தற்குப் பிறகு, பூமியின் மீது வேண்டுமென்றே மிகப்பெரிய பாகங்கள் விழ வைக்கப்படும் சம்பவம்" என்றார் அவர்.


1979ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஸ்கைலேப் ஆய்வு மையத்தின் பாகங்கள் மேற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் விழுந்தன. இது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.


-பி.பி.சி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.