தமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்!

தமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்!


துறைமுக நகரத்திட்டம் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு உங்களின் வாக்குகளினால் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.


கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'தற்போது நாட்டில் துறைமுக நகரம் தொடர்பான ஒரு புதிய சட்டம் அமுலாகப்போகும் இந்த நேரத்தில், வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் விசேடமாக தமிழ் முஸ்லிம் தரப்பினர் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சூழலை இந்த துறைமுக நகரம் ஏற்படுத்தப்போகின்றது.


விசேடமாக கொழும்பில் மொத்த சில்லறை விற்பனையில் ஈடுபடும் வியாபார நிலையில் முழுமையாக ஒரு பத்து வருடக் காலப்பகுதிக்குள் இல்லாமல் போகக்கூடிய ஒரு அபாய நிலை காணப்படுகின்றது. சீனாவினைச் சேர்ந்தவர்கள் நேரடியாக துறைமுக நகரத்தில் வந்து, அவர்களுடைய நிறுவனம் ஒன்றினை உருவாக்கினால், சீனாவில் இருந்துதான் இன்று பொருட்களை இறக்குமதி செய்து நாங்கள் இங்கு ஒரு 10 வீதத்தினை மேலதிகமாக வைத்து ஒரு இலாபத்தினை அடைந்து தமிழ், முஸ்லிம் தரப்புகள் விற்பனை செய்து வருகின்றோம்.


சிங்கள தரப்பிலும் தான் ஆனாலும் கூடியளவில் மொத்த சில்லறை விற்பனையில் அதிகம் ஈடுபடுவது தமிழ், முஸ்லிம் தரப்பினர்தான். இந்தநிலையில் 10 – 15 வீதத்தினை வைப்பதற்கு ஏன் சீனர்கள் விட வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் நேரடியாக இங்கே தங்களுடைய பொருட்களை விற்பனை செய்யக்கூடிய சூழல் அமையலாம். அந்த நேரத்தில் பெற்றாவில் தொழில் செய்யும் அனைவருக்கும் தொழில் இல்லாத அபாய நிலை உருவாகலாம்.


அதேநேரத்தில் பெந்தோட்டை, பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உருவாகலாம். சீனத் தொழிலதிபர்களை உருவாக்க அவர்கள் முயற்சிக்கலாம்.


அந்த வகையில் தமிழ், முஸ்லிம் மக்கள் நீங்கள் எந்த தரப்பினருக்கு வாக்களித்து உருவாக்கினீர்களோ, அவர்களிடம் கேளுங்கள் இப்படி ஒரு நிலைமை உள்ளதா? இது உண்மையா எனக் கேளுங்கள். அதற்கு பதிலளிப்பதற்கு ஒரு கால அவகாசமாவது கேளுங்கள். நாளைய தினம் இந்த துறைமுக நகரத்திட்டம் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு நீங்கள் அவர்களை கோர வேண்டும்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.


-தெரண


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.