14 நாட்களுக்கு நாட்டை முடக்குமாறு வலியுறுத்தல்; விஞ்ஞான ரீதியான வழிகாட்டல் வெளியீடு!

14 நாட்களுக்கு நாட்டை முடக்குமாறு வலியுறுத்தல்; விஞ்ஞான ரீதியான வழிகாட்டல் வெளியீடு!குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு நாட்டை முடக்கும் அவசரத் தேவையை வலியுறுத்தும் விஞ்ஞான ரீதியான வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹாங்காங் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பான பேராசிரியர் மலிக் பீரிஸ் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் மக்கள் நல மற்றும் மலேரியா தொடர்பான விசேட விருதுக்குரிய முன்னாள் பேராசிரியர் கமனி மென்டிஸூம் இணைந்து தற்போதையகொரோனா தொற்று பரவல் நிலைமையை எதிர்கொள்ளும் பொருட்டு விஞ்ஞான ரீதியான வழிமுறையாக இந்தப் பரிந்துரைகளை தயாரித்துள்ளனர்.

தொற்றுநோய் மற்றும் நோய் தடுப்பு தொடர்பான நிபுணர்கள் பலருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த வழிகாட்டல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் திரிபு முன்னைய அலையை விட வேகமாக பரவும் ஒன்றென அந்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் தன்மை இலங்கையிலும் பதிவாகியுள்ளதால், அதுவும் பரவலாம் என்பது இந்த விஞ்ஞான ரீதியான வழிகாட்டலில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை நிர்வகிப்பதற்காக சுகாதார கட்டமைப்பு வசமுள்ள வசதிகள் போதாமையால், எதிர்காலத்தில் தடுக்கப்படக்கூடிய மரணங்கள் கூட நிகழலாம் என இந்த விஞ்ஞான ரீதியிலான வழிகாட்டலின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைக்கு சிறிய பகுதிகளை தனிமைப்படுத்துவது, மாகாண ரீதியான பயணக் கட்டுப்பாடு, குறுகிய கால மற்றும் இடைக்கால முடக்கம், மனித செயற்பாடுகள் தொடர்பாக இடைக்கால கட்டுப்பாடுகளை விதித்தல் என்பன பலனளிக்காது என இந்த வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்திற்கு அழுத்தம் விடுக்கப்படுவதை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் பரிந்துரைகளையே இந்த நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.

அவையாவன,

  1. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல்.
  2. சகல மாவட்டங்களிலும் சில்லறைக் கடைகள், மருந்து விற்பனை நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றை திறந்து வைத்தல்.
  3. மரக்கறி, பழங்கள், பேக்கரி உற்பத்திகள், மாமிசம் மற்றும் ஏனைய உலர் உணவுகளை வாகனங்களில் விநியோகிக்க அனுமதிப்பத்திரம் வழங்கல்.
  4. கோரிக்கை பதிவுகளுக்கு அமைவாக விநியோகிக்க வரையறுக்கப்படும் வகையில் உணவுகளை தயாரிக்க அனுமதி வழங்கல்.
  5. அரசாங்கத்தின் அத்தியாவசியமான திணைக்களங்களை சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் திறந்து பாதுகாப்பு சேவை பிரகாரம் வரையறுக்கப்பட்ட ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைத்தல்.
  6. தொழிற்சாலை அல்லது வர்த்தகங்களில் ஈடுபடும் ஊழியர்களை வீட்டிலிருந்தவாறு பணியாற்ற இடமளித்தல்.
  7. சுகாதார தேவைகள், வேறு அவசர செயற்பாடுகள் அல்லது உணவு கொள்வனவிற்காக ஒரு தடவையில் ஒருவருக்கு மாத்திரம் வீட்டிலிருந்து வெளியில் செல்ல அனுமதித்தல்.
  8. நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்தல்.
  9. வெளிப்புற விவசாய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல்.

எனினும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவற்காக முழு நாட்டையும் மூடி வைப்பது பொருளாதார ரீதியில் சிறந்த கொள்கையாக அமையாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின் போது ஏற்பட்ட பொருளாதார தாக்கம் அளவிற்கு மூன்றாவது அலையின் போது ஏற்படாது என நினைப்பதாக W.D. லக்ஷ்மன் கூறினார்.

மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்கள் தோறும் மாத்திரமே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதையும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்நோக்கி செல்வதையும் வீட்டில் இருந்தே பணியாற்றும் கலாசாரத்திற்கு அநேகமான நிறுவனங்கள் பழகிக்கொண்டதையும் அதற்கு காரணமாக அவர் சுட்டிக்காட்டினார்.

-நியூஸ் பஸ்ட்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.