ஜூன் 07 இற்கு பிறகும் பயணக்கட்டுப்பாடா? - இராணுவ தளபதி விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜூன் 07 இற்கு பிறகும் பயணக்கட்டுப்பாடா? - இராணுவ தளபதி விளக்கம்!


தற்போதைய சூழ்நிலையில், அடுத்த வாரம் ஏற்படும் சூழலை ஆராய்ந்து நிலைமைகள் மோசமாயின் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான தீர்வுகள் தொடர்பில் தெரிவிக்கும்போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது,

தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கமைய ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்களையும் கருத்திற் கொண்டு பயணக்கட்டுப்பாடு தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.

எனினும் கடந்த 25ஆம் திகதி மக்கள் தமது தேவைகளுக்காக அவதிப்பட்டனர். இதன்போது மக்களை குறைகூற நாம் விரும்பவில்லை. ஏனைய நாடுகள் போன்று அல்லாது எமது மக்கள் மிகவும் பொறுமையாக அர்ப்பணிப்புடன் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். அதனை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

எனினும் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். நாட்டின் நிலைமைகள் குறித்து வைத்திய நிபுணர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளையும் கண்காணிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறும் காரணங்களை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்றால் போல் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றோம். அவ்வப்போது தளர்வுகளை ஏற்படுத்தாது இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக நாட்டினை முடக்க வேண்டும் என இறுதியாக கூடிய செயலணிக் கூட்டத்திலும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர்.

எனவே அவர்களின் ஆய்வுகள் தரவுகள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க நேர்ந்தது. அதற்கமைய 7ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தீர்மானங்களை எடுக்கையில் நாம் மக்களை கருத்திற் கொண்டுள்ளோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் சகலருடனும் கலந்துரையாடி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் வர்த்தக செயற்பாடுகள் மூலமாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.