ஒருவரை சிறையில் அடைத்து அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிருபிக்க முடியாது போனால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்! -பாதுகாப்புச் செயலாளர்
advertise here on top
advertise here on top

ஒருவரை சிறையில் அடைத்து அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிருபிக்க முடியாது போனால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்! -பாதுகாப்புச் செயலாளர்


ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் வலுவான ஆதாரங்களை கொண்டு அவர்களை தண்டிக்கும் நடவடிக்கைகளுக்காக கால தாமதம் ஏற்படும் எனவும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய புதிய கைதுகள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


பாதுகாப்பு அமைச்சில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 


அவர் மேலும் கூறுகையில்,


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பரந்த அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, எவ்வாறு இருப்பினும் இந்த விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர சிறிது காலம் தேவைப்படும். ஒருவர் மீது சந்தேகப்பட்டு அவரைக் கைது செய்வதன் மூலமோ, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதன் மூலமோ எதுவும் சரிவரப்போவதில்லை. 


கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் சரியான சாட்சியங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து அவர்களை தண்டிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிருபிக்க முடியாது போனால் அவர்கள் மீண்டும் வெளியில் வருவார்கள். எனவேதான் இந்த விசாரணைகளை ஆழமாகவும், பரந்த அளவிலும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.


இந்த நாட்டில் அப்பாவி மக்களை மிலேச்சத்தனமான முறையில் கொன்று குவிக்க திட்டமிட்ட நபர்களையே நாம் கைது செய்துள்ளோம். ஆகவே அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கக் கூடிய விதத்தில் சாட்சியங்களை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். 


ஒருவர் மீது குற்றம் சுமத்தி அவர்களை சிறையில் அடைத்தும் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிருபிக்க முடியாது போனால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். எனவேதான் அவ்வாறான தவறுகள் எதுவும் இடம்பெறக்கூடாது என்பதற்காக இவற்றை முறையாக செய்வதற்கான கால அவகாசம் தேவைப்படுகிறது.


இந்த தாக்குதல் தொடர்பில் பல தரப்பட்ட நபர்களிடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பெறவேண்டியுள்ளது. அதற்கான வெவ்வேறு உக்தியை கையாளவும் சில இறுக்கமான தீர்மானம் எடுக்கவும் வேண்டியுள்ளது. எவ்வாறு இருப்பினும் சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.


கடந்த காலத்தில் புதிய கைதுகள் பல இடம்பெற்றன. கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் செயற்பாடுகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறு இருப்பினும் பாதுகாப்பு அமைச்சு என்ற ரீதியிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய நபர்கள் என்ற ரீதியிலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டிய நபர்களால் நாம் கூறுவது ஒன்றுதான், ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட, தாக்குதலில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எம்மால் செய்து முடிக்க வேண்டிய கடமையை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.


எனினும் இது குறித்த நடவடிக்கைகளை ஒரு இரு நாட்களில் செய்து முடிக்க முடியாது, இந்த விசாரணைகளை முன்னெடுப்பதில் பல சவால்கள் உள்ளன, இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ள முறைமையும் அதனை நடத்தி முடித்துள்ள விதமும் மிகவும் சிக்கலுக்கு உரியதாகும். 


இவர்களுக்கு நிதி எவ்வாறு கிடைத்தது, யார் அனுப்பியது என்ற விடயங்கள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. அதனை நாம் ஆராய்ந்து வருகின்றோம். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றார்.


-ஆர்.யசி


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.