தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு ஊதியம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து அரசு தகவல் வெளிப்படுத்த வேண்டும்! -சம்பிக ரணவக்க

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு ஊதியம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து அரசு தகவல் வெளிப்படுத்த வேண்டும்! -சம்பிக ரணவக்க


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோருவதில் நாம ஒருபோதும் மௌனிக்கப் போவதில்லை. தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதல்களை தடுக்க தவறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மாத்திரமின்றி, 2010 ஆம் ஆண்டு வரை ஸஹ்ரான் உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினால் ஊதியம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் என்பவையும் எதிர்வரும் அரசாங்கத்தின் மூலமாவது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,


ஈஸ்டர் ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது. எனினும் அதில் பல முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.


ஐ.எஸ். உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்புக்களின் தலைவர்கள் அவர்களின் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. அவ்வாறிருக்கையில் ஸஹ்ரான் எவ்வாறு பிரதான சூத்திரதாரியாக இருப்பார்?


எனவே, கடந்த 2010 ஆம் ஆண்டு வரை ஸஹ்ரான் உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவு ஊதியம் வழங்கியமை, 2007 இல் கிழக்கில் காத்தான்குடி பிரதேசத்தில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பட்ட ரி-.56 ரக துப்பாக்கிகள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீள பெறப்படாமை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலன்று தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தாக்குதல்களை மேற்கொள்ளவிருந்த தாக்குதல்தாரி தெஹிவலைக்குச் சென்று குண்டு வெடிக்கச் செய்ய முன்னர் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரை சந்தித்ததாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சாட்சியம் வழங்கியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.


இந்த விவகாரத்தில் பல விடயங்களை மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படும் அரசாங்கமேனும் இதன் உண்மையான பின்னணியை கண்டறிய வேண்டும். தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுக்க தவறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மாத்திரமின்றி, இவ்வாறான உண்மைகளும் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான நியாயத்தை கோருவதில் நாம் ஒருபோதும் மௌனிக்க மாட்டோம் என்றார்.


-எம்.மனோசித்ரா


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.