காத்தான்குடி பள்ளிவாசலை சிறுவர்கள் பார்த்தால் இன்னும் ஸஹ்ரான்கள் உருவெடுக்கும் வாய்ப்புள்ளது! -வியாழேந்திரன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காத்தான்குடி பள்ளிவாசலை சிறுவர்கள் பார்த்தால் இன்னும் ஸஹ்ரான்கள் உருவெடுக்கும் வாய்ப்புள்ளது! -வியாழேந்திரன்

சதாசிவம் வியாழேந்திரன்

காத்தான்குடியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் குண்டு தாக்கப்பட்ட பள்ளிவாசல் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்குச் செல்லுகின்ற சிறுவர்கள், இளைஞர்கள் அவற்றைப் பார்க்கும் போது இன்னமும் உணர்வு தூண்டப்பட்டு வன்முறையாளர்களாகத் தான் மாறுவார்கள். இன்னமும் ஸஹ்ரான்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு – செங்கலடி, புலையவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏப்ரல்21 குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


"கடந்த கால அரசாங்கத்திலே இந்த குண்டுவெடிப்பு நடப்பது தொடர்பாக ஏற்கனவே சொல்லப்பட்டது. சில அரசியல் வாதிகளுக்குத் தெரிந்திருந்தது. சில அரசியல்வாதிகளின் பாதுகாவலர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.


ஸஹ்ரான் என்பவர் திடீர் என உருவாகியவர் அல்ல. ஒரு சில மதத் தலைவர்களும், ஒரு சில அரசியல் தலைவர்களுடைய உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள், ஒரு இனத்திற்கு எதிராக ஒரு மதத்திற்கு எதிராக, சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சுக்கள் நடவடிக்கைகள் தான் இவ்வாறானவர்கள் உருவாக காரணம்.


ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடிப்படை நோக்கமே ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவது. 90களிலே காத்தான்குடியில் இடம்பெற்ற ஒருசம்பவத்திலே குண்டு தாக்கப்பட்ட பள்ளிவாசல் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்குச் செல்லுகின்ற சிறுவர்கள், இளைஞர்கள் அவற்றைப் பார்க்கும் போது இன்னமும் உணர்வு தூண்டப்பட்டு வன்முறையாளர்களாகத் தான் மாறுவார்கள், இன்னமும் சஹரான்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.


இதனால் அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். அப்பாவிக் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. சில மதத்தலைவர்களுடைய பேச்சுக்கள் ஒரு இனத்தை உணர்ச்சியூட்டி இன்னொரு இனத்திற்கு எதிராகத் தற்கொலைக் குண்டு தாரியாக மாறுமளவிற்குக் கொண்டு செல்கிறது.


நாடாளுமன்றத்தில் சில அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும், இது ஒரு தனி தாயகம் என்றெல்லாம் பேசினார்கள்.


இவ்வாறான பேச்சு தான் வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு ஒரு உணர்வை ஊட்டி அது இன்னுமொரு சமூகத்திற்கு எதிராக மாறுகிறது. மீண்டும் இவ்வாறான ஒரு துன்பியல் சம்பவம், அவல நிலைமை ஏற்படக்கூடாது. இந்த அரசாங்கம் இது தொடர்பில் அதி தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.