கறுவா சிகரெட் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து! புற்றுநோய் உண்டாக்கும்?

கறுவா சிகரெட் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து! புற்றுநோய் உண்டாக்கும்?

கறுவா சிகரெட் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து! புற்றுநோய் உண்டாக்கும்?

புகையிலை மற்றும் புகையிலையை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற சிகரெட் உள்ளிட்ட புகைபிடித்தல் பொருட்கள் மனிதனின் உடல், உள ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவையாகும். அவற்றின் பாவனையால் தோற்றம் பெறும் உபாதைகளும் பாதிப்புக்களும் சாதாரணமானவை அல்ல.

புகைபிடித்தலுக்கும் சுவாசத் தொகுதி நோய்கள், புற்றுநோய்கள் அடங்கலான தொற்றா நோய்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. புகைபிடித்தலால் நுரையீரலில் மாத்திரமல்லாமல், இதயம், வயிறு, மூளை, அறிவு, பாலியல் தொகுதி, நரம்புத் தொகுதி என்பவற்றிலும் கூட பாதிப்புக்கள் ஏற்படும். அவை பாரிய பாதிப்புகளாக இருக்கும். இவற்றுக்கு சிகிச்சை அளிக்க பெருந்தொகை நிதியைச் செலவிட நேரிடும். அவை பெரும்பாலும் உயிராபத்து மிக்கதாகவே விளங்கும். இதனால் புகைபிடித்தல் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.  

புகைபிடித்தலின் போது புகையில் காணப்படும் நச்சு இரசாயன வாயுக்களால் நுரையீரலிலும் ஏனைய உடல் உள்ளுறுப்புகளிலும் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதற்கு மருத்துவ விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலம் எடுத்தது. இதனால் புகைபிடித்தலின் விளைவாக உலகம் பெருந்தொகை மனித அழிவைச் சந்தித்திருக்கின்றது. மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிகள் புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகைப்பிடித்தல் பொருட்கள் தொற்றா நோய்களுக்கு முக்கிய பங்களித்து வருவதைத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.  

அப்படியிருந்தும் உலகில் புகைபிடிப்பவர்களில் 80 சத வீதத்தினர் அதாவது 1.3 பில்லியன் பேர் குறைவிருத்தி நாடுகளில் வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம், புகைபிடித்தலால் வருடமொன்றுக்கு 08 மில்லியன் பேர் மரணமடைவதாகவும் அவர்களில் 07 மில்லியன் பேர் நேரடிப் புகைபிடித்தலால் ஏற்படும் நோய்களால் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு புகைபிடிப்பவர்கள் வெளியே விடும் புகையை சுவாசிக்கும் புகைபிடிக்காதவர்கள் 1.2 மில்லியன் பேர் வருடாந்தம் மரணமடைவதையும் அந்த ஸ்தாபனம் சுட்டிக்காட்டத் தவறவில்லை.  

இவ்வாறான நிலையில், 'புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகைபிடித்தல் பொருட்களின் பாவனையின் விளைவாக வருடமொன்றுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்' என்று இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்திருக்கின்றது.  

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை அலுவலக மதிப்பீட்டின்படி, இலங்கையில் புகையிலைப் பயன்பாட்டுக்காக வருடமொன்றுக்கு 200 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.  

புகையிலை மற்றும் புகைப்பிடித்தல் பொருட்களால் ஏற்படுகின்ற உடல், உள உபாதைகள் மற்றும் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவென ஏற்படுகின்ற பொருளாதார ரீதியிலான செலவுகள் அதிகமாகும். புகையிலையினால் மரணங்களும் சம்பவிக்கின்றன.

இந்நிலையில் புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகைபிடித்தல் பொருட்களின் பாவனையிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் உலகெங்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் நிமித்தம் இலங்கையும் பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.  

அந்த அடிப்படையில் கடந்த 20 வருட காலப் பகுதியில் புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகைபிடித்தல் பொருட்களின் பாவனை இந்நாட்டில் பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக 84 சத வீதமான மக்கள் புகைபிடிக்காதவர்களாக விளங்குகின்றனர் என்று குறிப்பிட்ட மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ, உலகில் 14 நாடுகள் புகைபிடித்தல் அற்ற நாடுகளாக விளங்குவதையும் சுட்டிக் காட்டினார். 

புகைபிடித்தல் அற்ற நாட்டை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் பயனாக, புகைபிடித்தலை ஒரு அருவருக்கத்தக்க செயலாகப் பார்க்கும் நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அத்தோடு பகிரங்கமாக புகைபிடிக்க முடியாத நிலைக்கு புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் உள்ளாகியுள்ளனர்  என வைத்தியர் சமாதி ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். 

இவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகைபிடித்தல் பொருட்கள் உற்பத்தி கைத்தொழில் துறை இந்நாட்டில் பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளது. என்றாலும் மறுபுறத்தில் புகைபிடித்தல் செயற்பாட்டை ஊக்குவிக்கவென பலவித தந்திரோபாயங்களும் இந்நாட்டிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் கறுவா சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, இது நிகொட்டின் அற்ற சிகரெட் என்றும் உற்பத்தியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதனால் இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை அண்மையில் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ புத்திஜீவிகள் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் உளநல பிரிவு பணிப்பாளர் வைத்தியர் ரொஹான் ரத்நாயக்க, 

'புகையிலை பயன்படுத்தப்படும் சிகரெட்டில் காணப்படும் நிக்கொட்டின் தவிர்ந்த அனைத்து நச்சு வாயுக்களும் கறுவா சிகரெட்டை புகைக்கும் போதும் வெளிப்படும். அவற்றை விடவும் இவை பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவற்றில் இருப்பது என்னவென்று மருத்துவ ரீதியிலான ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.  

இதேவேளை இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான நரம்பியல் மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன, 'நுரையீரலுக்கு தூயகாற்று அவசியமானது. நிக்கொட்டின் இல்லாவிட்டால் பிரச்சினை என்றில்லை. புகையில் நிகொட்டின் இல்லாவிட்டாலும் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதில் தார், காபன்மொனக்சைட் உள்ளிட்ட ஏனைய நச்சு வாயுக்கள் இருக்கவே செய்யும். வீடுகளில் பயன்படுத்தப்படும் விறகு அடுப்புகளால் கூட பெண்கள் சுவாசத் தொகுதி நோய்களுக்கு உள்ளாகின்றனர் என்றால் கறுவா சிகரெட் எம்மாத்திரம்? புகைபிடிப்பவர் மாத்திரமல்லாமல் அவர் வெளியே விடும் புகையை சுவாசிக்கும் புகைபிடிக்காதவரையும் அது பாதிக்கின்றது. கர்ப்பிணிப் பெண்களின் கருப்பையில் வளரும் சிசுவையும் கூட அது பாதிக்கக் கூடியதாக உள்ளது. கறுவாவை உணவில் சேர்த்து உண்ணும் போது அது நன்மை பயக்கின்ற போதிலும், புகைபிடிக்கப் பயன்படுத்தும் போது தீங்காகவே அமையும்' என்றார்.  

இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுவாசத் தொகுதி நோய்கள் தொடர்பான மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதியான சுவாசத் தொகுதி நோயியல் நிபுணர் டொக்டர் கீதால் பெரேரா குறிப்பிடுகையில், தூயகாற்றைத் தவிர அனைத்து வகை புகையும் உடலாரோக்கியத்தில் பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடியவையே. என்றாலும் அவை வெளிப்பட சிறிது காலம் எடுக்கும். இந்நாட்டில் சுமார் 300பெண்கள் சுவாசத்தொகுதி புற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் புகைபிடிப்பவர்கள் அல்லர். அதனால் புகைபிடிப்பதால் புகைபிடிப்பவர் மாத்திரமல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களும் கூட பலவித நோய்களுக்கு முகம் கொடுக்கவே செய்கின்றனர்' என்றார்.  

மேலும் தேசிய புற்றுநோய்கள் ஒழிப்பு திட்ட பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் டொக்டர் உபுலி பெரேரா, புகைபிடித்தல் புற்றுநோய்களுக்கு துணை புரியும் காரணிகளில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. புகையிலையைப் பாவித்து உற்பத்தி செய்யப்படும் சிகரெட் உள்ளிட்ட புகைபிடித்தல் பொருட்களிலும் புகையிலைக்கு பதிலாக வேறு தாவரங்களை பாவித்து உற்பத்தி செய்யப்படும் சிகரெட் உள்ளிட்ட புகைபிடித்தல் பொருட்களிலும் புற்றுநோய்க் காரணிகள் உள்ளன. இது ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.  

புற்றுநோய்கள் தொடர்பான ஆய்வுகளுக்கான அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ள நூல், நச்சு வகைகள் தொடர்பான ஆராய்ச்சி நூல் ஆகிய இரண்டிலும் புகையிலையைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் புகைபிடித்தல் பொருட்களைப் போன்று வேறு தாவரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் புகைபிடித்தல் பொருட்களிலும் புற்றுநோய்க் காரணிகள் உள்ளன என்று சுட்டிக் காட்டியுள்ளது என்றார்.  

இதேவேளை தேசிய புற்றுநோய்கள் நிலையத்தின் புற்றுநோய்கள் தொடர்பான விஷேட மருத்துவ நிபுணர் என். ஜெயகுமார், கறுவாவை உணவுக்கு பாவிக்கலாம். ஆனால் அதனை புகைபிடித்தல் பொருளாகப் பாவிக்கக் கூடாது. இது தொடர்பில் நிறைய ஆய்வுகள் வந்துள்ளன. அது நுரையீரலின் செயற்பாட்டையும் அதன் நோயெதிர்ப்பு கட்டமைப்பையும் பாதிக்கும்' என்று சுட்டிக் காட்டினார்.  

ஆகவே புகையிலை மற்றும் புகையிலையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சிகரெட் உள்ளிட்ட புகைபிடித்தல் பொருட்கள் மாத்திரமல்லாமல் எந்தவொரு தாவரத்தின் இலையை எரித்து புகைபிடித்தாலும் அது உடல் உள ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவே அமையும் என்பது தெளிவாகின்றது. இது மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் தூயகாற்றை சுவாசித்து நுரையீரல் உள்ளிட்ட முழு உடலின் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக சிரத்தை காட்டுவதே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்ததாகும்.

-மர்லின் மரிக்கார்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.