கோட்டாவுக்கு மக்கள் ஏன் அதிகாரம் வழங்கினார்கள் என்பதை அவரும் அவரை தலைமையிலான அரசும் புரிந்துகொள்ள வேண்டும்! -AKD

கோட்டாவுக்கு மக்கள் ஏன் அதிகாரம் வழங்கினார்கள் என்பதை அவரும் அவரை தலைமையிலான அரசும் புரிந்துகொள்ள வேண்டும்! -AKD


இலங்கைக்குள் சீன பிராந்தியத்தை ஸ்தாபிப்பதற்காக மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் உணர்ந்து கொள்ள வேண்டும். 


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் சர்வசன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.


ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். 


இந்த சட்டமூலம் நகரசபை சட்டம் மற்றும் முதலீட்டு சட்டம் உள்ளிட்ட 7 சட்டங்களுக்கும் அப்பாற்பட்டதாகக் காணப்படுகிறது. 


அத்தோடு இந்த சட்ட மூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக நகரம் எந்தவொரு நகர சபைக்கோ பிரதேச சபைக்கோ உட்படாததாகவே காணப்படுகிறது. குறைந்தபட்சம் கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்டதாகக் கூட இது அமையவில்லை.


நாட்டில் எந்தவொரு பகுதியானாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே அவற்றை ஆட்சி செய்வார்கள். ஆனால் கொழும்பு துறைமுக நகரம் அமைந்துள்ள 1115 ஏக்கர் நிலப்பகுதியினை ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுவையன்றி வேறு எவரும் நிர்வகிக்க முடியாது. அத்தோடு இங்கு பொருட்களை கொள்வனவு செய்து வெளியேறும் போது அவற்றுக்கு வரி செலுத்தப்பட வேண்டும்.


இதில் சீனாவின் 80 வீத முதலீடு காணப்படுவதால் குறித்த சீன முதலீட்டு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்பவும் அழுத்தத்திற்கு அமையவும் இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 


சீனாவின் இராஜதந்திர பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதே  இதன் இலக்காகும். மாறாக இலங்கைக்கு இதனால் எவ்வித நன்மையும் கிடையாது.


இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய கால கட்டம் இதுவாகும். 


இலங்கைக்குள் சீன பிராந்தியத்தை உருவாக்குவதற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமின்றி , சர்வசன வாக்கெடுப்பை நடத்தி நிறைவேற்ற வேண்டும்.


எவ்வாறிருப்பினும் நாட்டை பிரித்து அதனை ஏனைய நாடுகளுக்கு பகிரிந்தளிக்கும் உரிமை ஜனாதிபதிக்குக் கிடையாது. இது நாட்டின் சொத்து என்பதால் இது தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிட மக்களுக்கு உரிமை உண்டு. எவ்வாறிருப்பினும் இந்த சட்ட மூலம் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே 5 நாட்கள் தொடர் விடுமுறை வரும் காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


இது தொடர்பான கருத்துக்களை வெளியிட்ட ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறான நிலைமை எனில் சாதாரண மக்களின் நிலைமை எவ்வாறிருக்கும் என்று சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் இவர் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


எனவே நீதிமன்றம் நாட்டின் இறையாண்மையை கருத்திற் கொண்டும் நாட்டின் எதிர்காலம் , அரசியலமைப்பு மற்றும் அடிப்படை சட்டம் என்பவற்றை பிரதானமாகக் கொண்டு சிறந்த தீர்ப்பினை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.


-எம்.மனோசித்ரா


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.