சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 11 பேர் இன்று விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 11 பேர் இன்று விடுதலை!


பாராளுமன்ற உறுப்பினர்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘கனேமுல்ல சஞ்சீவ’ அல்லது ' மாலிங்கமுவே சஞ்ஜீவ ' எனப்படும் சஞ்சீவ சமரரத்ன உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால்  இன்று (12) விடுதலை செய்யப்பட்டனர்.


குறித்த வழக்கு  இன்று கொழும்பு பிரதான  நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த 11 பேரையும் விடுதலை செய்வதாக நீதிவான் அறிவித்தார்.


 தமிழீழ விடுதலை புலிகள்  அமைப்பினால் கடந்த யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தோண்டியெடுத்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கடத்தி இரகசியமான முறையில் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தமை மற்றும் கொள்வனவு செய்தமை,  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த  விசாரணைகள் இடம்பெற்று வந்தன.


இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஏனைய நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு குற்ற தடுப்புப்  பிரிவினர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் இந்த தீர்ப்பை அறிவித்தார்.

வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட  முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய சோதனைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கனேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 15 பேரை கைது செய்திருந்தனர். 


கனேமுல்லை சஞ்சீவ கைது செய்யப்படும் போது வேறு ஒரு வழக்குக்காக விளக்கமறியலில் இருந்தார். அவரை சுமந்திரன் எம்.பி.யை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டிய சந்தேகத்திலும் ஆயுத கடத்தல் தொடர்பிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விளக்கமரியலில் இருந்து தமது பொறுப்பில் எடுத்து, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் தடுத்து வைத்து 2019 ஆம் ஆண்டு முதல் விசாரித்திருந்தனர்.


சந்தேகநபர்கள் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் அதிக காலம் தடுத்து வைப்பு உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த விவகாரத்தில் கைது செய்யப்ப்ட்ட 15 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.