PHOTOS : மியான்மரில் மக்கள் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : மியான்மரில் மக்கள் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடு!

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100இற்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் இராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் இராணுவ ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

மியான்மர் இராணுவம் இந்த போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. போராட்டத்தின் போது பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம் இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

அதேபோல் மியான்மர் மக்களுக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவும் தொடர்ந்து பெருகி வருகிறது. இது மியான்மர் இராணுவத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் இராணுவத்தினர் மேலும் ஆக்ரோஷத்துடன் போராட்டத்தை ஒடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் மியான்மரின் 2ஆவது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் நேற்று அதிகாலை மருத்துவ மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சாலைகளில் அணிவகுத்து சென்றனர்.‌ அவர்கள் இராணுவ ஆட்சியை கண்டித்தும் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.‌

போராட்டக்காரர்கள் அனைவரும் யாங்கூனில் உள்ள ஹெல்டன் சென்டர் என்ற பகுதியில் கூடியபோது இராணுவ வீரர்கள் அங்கு தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை வழிமறித்தனர்.‌

அதன்பின்னர் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி செல்ல முற்பட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.‌‌ அதேபோல் போராட்டக்காரர்களும் கையில் கிடைத்த பொருட்களை இராணுவ வீரர்கள் மீது வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்.

இதனால் அந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்து அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது.‌ போராட்டத்தை கலைக்க இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

அதேசமயம் போராட்டக்காரர்களை இராணுவ வீரர்கள் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி லொரிகளில் ஏற்றி சென்றனர்.‌ மிகவும் ஆக்ரோஷமான முறையில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் மியான்மரின் மற்றொரு மிகப்பெரிய நகரமான மாண்டலேவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை இராணுவ வீரர்கள் கைது செய்து லொரிகளில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.‌

ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு ஆளும் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள்‌ உள்பட 800இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.