ஹஜ்ஜுல் அக்பரின் கைது தொடர்பாக ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் ஊடக அறிக்கை!

ஹஜ்ஜுல் அக்பரின் கைது தொடர்பாக ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் ஊடக அறிக்கை!


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவிக்கின்றது.


1954ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு யாப்பின் அடிப்படையில் இயங்கிவரும் ஒரு திறந்த இயக்கமாகும்.


ஜமாஅத்தே இஸ்லாமி என்ற பெயரிலோ வேறு பெயர்களிலோ உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ இயங்கும் எந்த இயக்கத்துடனும் எவ்விதக் கட்டுப்பாட்டுடன் கூடிய தொடர்பையும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கொண்டிருக்காது. நாட்டின் யாப்புக்கு மாற்றமாக செயற்பட மாட்டாது. சட்டபூர்வமான சாத்விக வழிமுறைகளையே கையாளும். கட்சி அரசியலுக்கு அப்பாலிருந்தே செயற்படும்.


முதலான வழிகாட்டல் தத்துவங்களை 1965ஆம் ஆண்டு முதல் தனது யாப்பில் உள்ளடக்கி அவற்றை கண்டிப்பாக கடைபிடித்தொழுகும் ஒரு சுதந்திரமான அமைப்பே இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி.


உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சுமார் 24 (1994- 2018) வருடங்களாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியை வழிநடத்தியவர். இக்காலப் பகுதியிலோ அதற்கு முன்னரோ தீவிரவாதத்தைப் பிரச்சாரம் செய்ததாகவோ வெறுப்புப் பேச்சுக்களில் ஈடுபட்டதாகவோ வன்முறையைத் தூண்டியதாகவோ அவர் மீது எவ்வித குற்றமும் சுமத்தப்படவில்லை.


உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க சதித்திட்டம் தீட்டியதற்கு சாட்சியங்கள் உள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 32 நாட்கள் விசாரணை செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.


இம்முறை அவர் வஹாபிசத்தையம் தீவிரவாதத்தையும் பரப்பினார், இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார் ஆகிய குற்றச்சாட்டுகளின் பெயரிலேயே நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மீது காழ்ப்புணர்ச்சியும் துவேசமும் கொண்ட சிலர் வழங்கிய பிழையான சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக மறுக்கின்றோம்.


$ads={1}


பாதுகாப்புத் துறையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின்போது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியே வந்தனர். அவ்வாறு தொடர்ந்தும் எமது ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராகவே உள்ளோம்.


கடந்த முறை போன்றே விசாரணைகளின் பின் அவரது குற்றமற்ற தன்மை நிரூபிக்கப்படும் என நாம் உறுதியாக நம்புகிறோம். இவ்விடயத்தில் சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் நாம் பெற்று வருகிறோம். நீதி விசாரணையின் போது எமக்கு நியாயம் கிடைக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.


எம்.எச்.எம். ஹஸன்

உதவிப் பொதுச் செயலாளர்
கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.