இன்றைய அரசு ஆட்சிக்கு வர ஈஸ்டர் தாக்குதல் - அதிரடி கருத்து!

இன்றைய அரசு ஆட்சிக்கு வர ஈஸ்டர் தாக்குதல் - அதிரடி கருத்து!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல்ரீதியாக உதவியுள்ளது, ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நன்மை பெற்றது, இன்றைய இலங்கை அரசாங்கம்தான் என்ற கோணத்தில், இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எமது பலத்த கோரிக்கைகளின் பின்னர்தான், உயிர்த்த ஞாயிறு விசாரணை குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் எங்களுக்கு பல கேள்விகள் இன்று எழுந்துள்ளன. சஹரான் பயங்கரவாத கும்பல் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த பயங்கரவாத கும்பலுக்கும் சாதாரண முஸ்லிம் மக்களுக்கும் தொடர்பில்லை என்பது உண்மை. ஆனால், செய்தவர் பயங்கரவாதி சஹாரான் என்றால், செய்வித்தவர் யார் என்ற பிரதான கேள்வி எழுகிறது.

சஹரானை தடுக்க, கைது செய்ய தவறி விட்டர்கள். பொறுப்பு கூரலில் தவறி விட்டார்கள். இந்த குற்றசாட்டுகளை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை சுட்டிக்காட்டி விட்டு மட்டும் தப்ப முடியாது.

அதற்கு அப்பால் பல உண்மைகள் உள்ளன. அவை வெளியே வர வேண்டும். அவற்றை விசாரியுங்கள். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது.

ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல் ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நன்மை பெற்றது இன்றைய இலங்கை அரசாங்கம்தான். இந்த கோணத்தில், இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் பல உறங்கும் உண்மைகள் வெளிவரும். உண்மையில், சஹரான் கும்பல் நடத்திய தாக்குதல்கள், “சொப்ட் டார்கட்ஸ்” என்ற “மென் இலக்குகள்” ஆகும்.

அரசின் மீது கோபம் இருந்தால், அரசின் பாதுகாப்பு தரப்பின் மீதுதான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை முதலில் நடத்துவார்கள்.

ஆனால், இங்கே அப்பாவி கத்தோலிக்க மக்கள் மீது, அதிலும் பெரும்பாலும் தமிழ் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்கள் மீது, கத்தோலிக்க, கிறிஸ்தவ, தேவாலயங்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மென்மையான இலக்குகளை தெரிவு செய்ய, பயங்கரவாதி சஹரான் கும்பலுக்கு இருந்த விசேட தேவை என்ன? இந்த கேள்விகளுக்கும் விடை கிடைக்க வேண்டும்.

உண்மையான சூத்திரதாரி யார் என்பது எங்களுக்கு தெரியும். சாட்சியங்கள் உள்ளன. நாம் ஆட்சிக்கு வந்தால், ஒரே மாதத்தில் சூத்திரதாரிகளை கூண்டில் அடைப்போம் என அன்று கூவிய விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இன்று எங்கே?

இவற்றுக்கு ஜனாதிபதி கோட்டாபயவின் பதில் என்ன? கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் கத்தோலிக்க, கிறிஸ்தவர்களாக இருக்கலாம்.

அவர்களை பற்றி மத அடிப்படையில் பேராயர் ஆண்டகை மல்கம் ரஞ்சித் உரக்க பேசலாம். கறுப்பு ஞாயிறு, கறுப்பு வாரம் என்ற எதிர்ப்பு போராட்டங்களை நடத்தலாம். அதற்கான உரிமை அவருக்கு உண்டு.

அதேபோல், கொல்லப்பட்டவர்கள், இனரீதியாக பெரும்பான்மையினர் தமிழர்கள் ஆவர். எனது தொகுதியான கொழும்பு கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை மற்றும் மட்டக்களப்பில் கொல்லப்பட்டோர் தமிழர்கள்.

ஆகவே இது பற்றி கேள்வி எழுப்ப எங்களுக்கும் உரிமை உண்டு. கொல்லப்பட்டோரின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

இதுபற்றி நியாயமான விசாரணை வேண்டும். எங்கள் மக்களை காவு கொடுத்து விட்டு, அரசியல் இலாபம் பெற எவருக்கும் நாம் இடம் கொடுக்க முடியாது.

உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிட்டால், வெளிநாட்டு விசாரணை வேண்டும். இது தொடர்பில் பேராயர் கூறுவது சரி என்றே நான் நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.