குருகொட ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட சடலம்; எனது மனைவியுடன் தவறான தொடர்பு பேணா முயற்சி செய்தார்; கொலை செய்த கொமாண்டோ வாக்குமூலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருகொட ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட சடலம்; எனது மனைவியுடன் தவறான தொடர்பு பேணா முயற்சி செய்தார்; கொலை செய்த கொமாண்டோ வாக்குமூலம்!


ஹொரனை - குருகொட ஓயாவிலிருந்து மோட்டார்‌ சைக்கிள்‌ ஒன்றுடன்‌ இணைத்து கட்டப்பட்ட நிலையில் மூழ்கடிக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ கொமாண்டோ வீரரான சந்தருவன்‌ ஹல்ப லியனகே என்பவரின்‌ கொலை தொடர்பில்‌ இராணுவத்தில்‌ உயர்‌ அதிகாரி ஒருவரின்‌ பாதுகாப்பு பிரிவின்‌ கொமாண்டோ படை வீரரும்‌, அவரது நண்பரான முன்னாள்‌ வீரர்‌ ஒருவரும்‌ பொலிஸாரால்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்‌.


கனேமுல்லை கொமாண்டோ படையணி முகாமிலிருந்து இரவு நேரத்தில்‌ தனது சகாவான ஓய்வுபெற்ற கொமாண்டோ வீரருடன்‌ மோட்டார்‌ சைக்கிளில்‌ சென்று, குறித்த கொலையை செய்துவிட்டு, சடலத்தை கொல்லப்பட்ட நபரின்‌ மோட்டார்‌ சைக்‌கிளிலேயே கட்டி ஆற்றில்‌ மூழ்கடித்துவிட்டு சந்தேக நபர்‌ இராணுவ முகாமுக்கு திரும்பி கடமையில்‌ ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில்‌ கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே பொலிஸார்‌ அவரையும்‌ அவரது சகாவையும்‌ கைது செய்துள்ளனர்‌.


ஹொரனை பொலிஸ்‌ பிரிவுக்கு உட்பட்ட, குருகொட - தம்பர பிரதேசத்தில்‌ மேவக்‌ ஓயாவிலிருந்து, மோட்டார்‌ சைக்கிள்‌ ஒன்றுடன்‌ கட்டப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருந்த நபர்‌ ஒருவரின்‌ உடல்‌ எச்சங்கள்‌ கடந்த பெப்ரவரி மாதம்‌ 11 ஆம்‌ திகதி பொலிஸாரால்‌ மீட்கப்பட்டிருந்தது.


ஆற்றின்‌ நீர்‌ மட்டத்தில்‌ ஏற்பட்ட மாற்றத்தின்‌ பின்னர்‌, சேற்றில்‌ புதைந்திருந்த மோட்டார்‌ சைக்‌கிளைக்‌ கண்டு நபர்‌ ஒருவர்‌ அதன்‌ அருகே சென்று பார்த்தபோது, கேபிள்‌ கம்பி ஒன்றினால்‌ மோட்டார்‌ சைக்கிளில்‌ கட்டப்பட்ட சடலம்‌ ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து அது குறித்து பொலிஸாருக்கு தகவல்‌ அளிக்கப்பட்ட நிலையிலேயே இது குறித்து பொலிஸ்‌ விசாரணைகள்‌ ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும்‌, குறித்த மோட்டார்‌ சைக்கிளில்‌ இலக்கத்தகடு எவையும்‌ காணப்படாத நிலையில்‌, செசி இலக்கத்தை மையப்படுத்தி குறித்த சடலம்‌ தொடர்பில்‌ விசாரணைகள்‌ ஆரம்பிக்கப்பட்டன. 


இதன்போது அந்த மோட்டார்‌ சைக்கிள்‌ பொலன்னறுவையை சேர்ந்த ஒருவருக்குச்‌ சொந்தமானது எனவும்‌ அது பின்னர்‌ வேறு ஒரு தரப்புக்கு விற்கப்பட்டுள்ளமையும்‌ தெரிய வந்துள்ளது. பின்னர்‌ பொலிஸார்‌ காப்புறுதி நிறுவனம்‌ உள்ளிட்ட நிறுவன தகவல்கலையும்‌ பெற்று முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில்‌ குறித்த மோட்டார்‌ சைக்கிளின்‌ தற்போதைய உரிமையாளர்‌ தொடர்பில்‌ தகவல்கள்‌ வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


இதனையடுத்து குறித்த நபரைத்‌ தேடி, அவரின்‌ வெல்லம்பிட்டி வீட்டுக்கு பொலிஸார்‌ சென்றபோது, அங்கு அவரது மனைவியே இருந்துள்ளார்‌. இந்நிலையில்‌, குறித்த நபர்‌ ஹொரனை பகுதிக்கு தனது நண்பரின்‌ வீட்டுக்கு செல்வதாகக்‌ கூறி ஒரு மாதத்துக்கு முன்னர்‌ சென்றதாகவும்‌, சென்றவர்‌ இதுவரை வீடு திரும்பவில்லை எனவும்‌ மனைவி வாக்குமூலமளித்துள்ளார்‌. 


இது தொடர்பில்‌ வெல்லம்பிட்டி பொலிஸாரிடம்‌ முறையிடச்‌ சென்றபோதும்‌ அவர்கள்‌ முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை எனவும்‌ அவர்‌ குறிப்பிட்டுள்ளார்‌.


இவ்வாறான நிலையிலேயே அங்கொடை - கொஹிலவத்தை - ஹல்ப பகுதியைச்‌ சேர்ந்த 39 வயதான சந்தருவன்‌ ஹல்ப லியனகே தொடர்பில்‌ பொலிஸார்‌ மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்‌. 


இந்த விசாரணைகளின் போது குறித்த நபர்‌ இராணுவ கொமாண்டோ படையணியில்‌ சேவையாற்றி விலகியவர்‌ என்பதும்‌ அதன்‌ பின்னர்‌ வட்டிக்குப்‌ பணம்‌ கொடுக்கும்‌ தொழிலை அவர்‌ முன்னெடுத்துள்ளமையும்‌ பொலிஸ்‌ விசாரணையில்‌ தெரியவந்துள்ளது.


$ads={1}


அத்துடன்‌ அவர்‌ பாதாள உலகக்‌ குழு தலைவனாக கருதப்பட்ட அண்மையில்‌ இந்தியாவில்‌ உயிரிழந்த அங்கொட லொக்காவின்‌ குழுவில்‌ முக்கிய துப்பாக்‌கிதாரியாக திகழ்ந்துள்ளமையும்‌, 'சதா' எனும்‌ பெயரில்‌ அவர்‌ அக்குழுவில்‌ அறியப்படுகின்றமையும்‌ தெரிய வந்துள்ளது.


இந்நிலையில்‌, ஏதேனும்‌ குற்றச்‌ செயல்‌ ஒன்றைச்‌ செய்துவிட்டு, ஹொரனையில்‌ உள்ள அவரது நண்பரான கொமாண்டோ படை வீரரின்‌ வீட்டில்‌ சில நாட்கள்‌ அவர்‌ தங்குவதும்‌, அவ்வீட்டில்‌ பிரத்தியேகமாக இதற்கான ஓர்‌ இடமொன்று அமைக்கப்பட்டுள்ளமையும்‌ பொலிஸ்‌ விசாரணையில்‌ தெரியவந்துள்ளது.


கடந்த பெப்ரவரி மாதம்‌ 11 ஆம்‌ இகதியும்‌, சந்தருவன்‌ உயிர்‌ அச்சுறுத்தல்‌ காரணமாக குறித்த வீட்டுகே சென்றுள்ளமை விசாரணைகளில்‌ வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அறிவியல்‌ தடயங்கள்‌ ஊடாக கண்டறிந்த பொலிஸார்‌, குறித்த வீடு தொடர்பில்‌ விசாரித்தபோது, அவ்வீடு இராணுவத்தின்‌ உயர்‌ அதிகாரி ஒருவரின்‌ பாதுகாப்பு படைப்‌பிரிவில்‌ உள்ள கொமாண்டோ வீரர்‌ ஒருவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளது.


இதனையடுத்து பொலிஸார்‌, குறித்த கொமாண்டோ படை வீரரை விசாரணை செய்ததை தொடர்ந்து அனைத்து உண்மைகளும்‌ வெளிப்பட்டுள்ளதுடன்‌ அவரும்‌ அவரது சகாவும்‌ கைது செய்யப்பட்டுள்ளார்‌.


உயிர்‌ பாதுகாப்புக்காக, கொமாண்டோ வீரரின்‌ ஹொரணை வீட்டில்‌ மறைந்திருக்கும்‌ வழக்கம்‌ கொண்டுள்ள சந்துருவன்‌, குறித்த கொமாண்டோ வீரரின்‌ மனைவியிடம்‌ தவறான தொடர்பை பேண எத்தனித்துள்ளார்‌. இது தொடர்பில்‌ கொமாண்டோ வீரரின்‌ மனைவி தனது கணவருக்கு தெரிவித்துள்ளார்‌. 


எனது மனைவியுடன் தவறான தொடர்பு பேணா முயற்சி செய்தார்; கொலை செய்த கொமாண்டோ வாக்குமூலம்!

இந்நிலையில்‌ சந்துருவனை பழி தீர்க்க கொமாண்டோ வீரர்‌ காத்திருந்துள்ளார்‌.


இவ்வாறான நேரத்திலேயே சந்துருவன்‌ கடந்த பெப்ரவரி 11 ஆம்‌ திகதி பாதுகாப்புக்காக ஹொரனை வீட்டுக்கு செல்ல கொமாண்டோ வீரரிடம்‌ வினவியுள்ளார்‌.


அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தியுள்ள கொமாண்டர்‌ படை வீரர்‌, சந்துருவனை வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு, கனேமுல்லை முகாமிலிருந்து மோட்டார்‌ சைக்கிளில்‌ ஹொரனைக்கு

சென்றுள்ளார்‌. செல்லும்‌ வழியில்‌ சேதவத்தை பகுதியில்‌ உள்ள முன்னாள்‌ கொமாண்டோ படை வீரரான சகா ஒருவரையும்‌ அழைத்துக்கொண்டு 4 பியர்‌ ரின்களையும்‌ கொள்வனவு செய்துகொண்டு சென்றுள்ளார்‌.


பின்னர்‌ அன்றைய இனம்‌ சந்துருவனுடன்‌ சேர்ந்து பியர்‌ குடித்துள்ள சந்தேக நபர்கள்‌, பின்னர்‌ அவரை ஒரு அறையில்‌ பூட்டி இறக்கும்வரை அடித்துள்ளனர்‌.


அதன்பின்னர்‌ அவரது மோட்டார்‌ சைக்கிளிலேயே கட்டி எடுத்துச்‌ சென்று குருகொட ஆற்றில்‌ மூழ்கடித்துள்ளனர்‌. பின்னர்‌ இரவோடிரவாகவே, கொமாண்டோ படை வீரர்‌ மோட்டார்‌ சைக்கிளில்‌ மீள கனேமுல்லை முகாமுக்கு திரும்பி வழக்கமான கடமைகளை முன்னெடுத்துள்ளார்‌ என விசாரணைகளில்‌ வெளிப்பட்டுள்ளன.


$ads={1}


எவ்வாறாயினும்‌ குறித்த கொமாண்டோ படைவீரர்‌, கைது செய்யப்பட 3 நாட்களுக்கு முன்னர்‌ உயர்‌ இராணுவ அதிகாரியின் பாதுகாப்புக்‌ குழுவிலிருந்து மாற்றப்பட்டு, கொமாண்டோ படை முகாமுக்கு அனுப்பட்டிருந்ததாகவும்‌ அறிய முடிகிறது. எனினும் ‌கொலை இடம்பெறும்போது அவர்‌ உயர்‌ இராணுவ அதிகாரியின்‌ பாதுகாப்புக்‌ குழுவிலேயே கடமையாற்றியுள்ளார்‌.


கொமாண்டோ படை வீரரை ஹொரனை பொலிஸாரும்‌, அவரது சகாவை கொம்பனித்‌ தெரு பொலிஸாரும்‌ கைது செய்துள்ளனர்‌.


-எம்‌.எப்‌.எம்‌.பஸீர்‌



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.