காலி கடுகொட உலமா சபை மாத்திரம் அடிப்படைவாத கொள்கையற்றது; ஜம்இய்யதுல் உலமா சபையை தடை செய்யுங்கள்! -ஞானசார தேரர்

காலி கடுகொட உலமா சபை மாத்திரம் அடிப்படைவாத கொள்கையற்றது; ஜம்இய்யதுல் உலமா சபையை தடை செய்யுங்கள்! -ஞானசார தேரர்


ஜம்இய்யதுல் உலமா சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும். உலமா சபையின் தலைவர் ரிஷ்வி முப்தியின் செயற்பாடுகள் நாட்டில் அடிப்படைவாதத்ததை தோற்றுவிப்பதாக உள்ளன. இவரின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறப்பு விசேட குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.


பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் புரையோடிபோயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து தொடர்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளோம். உண்மைகளை குறிப்பிடுவதால் ஒரு தரப்பினரால இனவாதிகள் என சித்தரிக்கப்பட்டுள்ளோம். பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம் சமூகத்ததுக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எம்மீது முன்வைக்கப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.


2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் எந்தளவுக்கு வலுப் பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தியது. இதற்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். இதுவரையில் காணப்பட்ட தவறை தற்போதைய அரசாங்கமாவது திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பாகும்.69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே காணப்படுகிறது.


இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்குவதற்கு உலமாக சபை பாரிய பங்களிப்பு செய்துள்ளது. ஜோர்தான் நாட்டில் அரச சார்பற்ற அமைப்பு கடந்த வாரம் உலகில் பலம்வாய்ந்த முஸ்லிம் தலைவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பெயர் பட்டியலில் 11 ஆவது தடவையாகவும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளடக்கப்பட்டுள்ளார்.பல்வேறு செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு இவரின் பெயர் 11 ஆவது தடவையாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


$ads={2}


24 மாவட்டங்களில் 155 உலமாக சபைக்காக காரியாலயங்களை ஸ்தாபித்தல், இஸ்லாமிய சட்டத்தை வலுப்படுத்தி முன்னெடுத்தல், இஸ்லாமிய மார்க்கத்திற்கு பிற மதத்தவர்களை இணைத்தல், இஸ்லாமிய கல்வியை போதித்தல் உள்ளிட்ட காரணிகளை சிறப்பாக செய்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் உலமா சபை தடை செய்யப்பட வேண்டும். கடந்த காலங்களில் இச்சபையினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பு செய்துள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட விசாரணை குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாத விவகாரத்தில் கடந்த கால அரசாங்கம் செய்த தவறுகளை தற்போதைய அரசாங்கமும் தொடரக் கூடாது.


பாரம்பரிய முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் எவ்வாறு நல்லிணக்கமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு அண்மையில் தொலைக்காட்சியில் லக்ஷபதி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சுக்ரா முனவ்வர் சிறந்த எடுத்துக்காட்டு; காலி கடுகொட பகுதியில் உள்ள உலமா சபை மாத்திரம் அடிப்படைவாத கொள்கையற்ற மத சபையாக காணப்படுகிறது.


இனங்களுக்கு மத்தியில் தேசிய நல்லிணக்கம் பலப்பட வேண்டுமாயின் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மாணவி சுக்ரா முனவரை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.ஒரு சில பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் கூட அடிப்படைவாத கொள்கை விதைக்கப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய செயற்பாடாகும்.அடிப்படைவாதத்துக்கு தீர்வு காணவிடின் அது எதிர்காலத்தில் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை விட பாரிய அழிவை ஏற்படுத்தும் என்றார்.


-இராஜதுரை ஹஷான்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.