லக்ஸ்மன் கதிர்காமரைச் சுட்ட புலி உறுப்பினர் நான்தான்? - வெளியான அதிர்ச்சித் தகவல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லக்ஸ்மன் கதிர்காமரைச் சுட்ட புலி உறுப்பினர் நான்தான்? - வெளியான அதிர்ச்சித் தகவல்

லக்ஸ்மன் கதிர்காமரைச் சுட்ட புலி உறுப்பினர் நான்தான்" என்று உரிமை கோரி இதுவரை நான்கு ஈழத்தமிழர்கள் யேர்மனியில் புகலிடக்கோரிக்கைக்கு விண்ணப்பித்து, கைதுசெய்யப்பட்டுச் சிறையிருக்கிறார்கள். ஏற்கனவே பிரேமதாச குண்டுவெடிப்பில் இறந்தபோது, நான் தான் குண்டுவைக்க மின்கலம் வாங்கிக்கொடுத்தேன்" வகையிலான நூறுக்கு மேற்பட்ட வழக்குகள் யேர்மனியில் பதிவாகி சாதனைபடைத்தனவாம்.

இந்த வகையில் தஞ்சம் கோரினால் இங்கே வதிவிட அனுமதி கிடைத்துவிடும் என்று யார் கணக்குப்போட்டுக் கொடுக்கிறார்களோ தெரியவில்லை. உண்மையில் இவ்வாறான கொலைக்குற்றங்களை அடிப்படையாக வைத்துத் தஞ்சம் கோரினால் இந்தநாடு நேரடியாகச் சிறைக்கு அனுப்பிவிடும். அது ஒருபுறமிருக்கட்டும்.

விடயம் யாதெனின்; மௌனித்துப்போன விடுதலைப்புலிகளை இன்னமும் உயிர்ப்பித்து வைத்து, போர்க்குற்றவாளிகளுக்கும் செயல் இதுவென்பதை உணராது பலர் இவ்வாறு புகலிடக்கோரிக்கைக்காக ஏதாவதொன்றை உளறிவிடுகிறார்கள். தமிழீழ விடுதளைக்காக இங்கேயிருந்து செயற்படும் பல சிங்கள நண்பர்கள் இந்த முரண்தொடர்பில் மிகவும் சலனத்துக்குள்ளாகியிருந்தனர்.

கடந்த 2018 இல் ஓர் தமிழ் இளைஞர் இங்குவந்து தஞ்சம்கோரியதற்கான காரணமாக; "புலிகளின் உறுப்பினராக இருந்தபோது பத்து இராணுவத்தினரை கட்டிவைத்துத் தாம் சுட்டுக்கொன்றதாகவும், இப்போது அந்த இராணுவத்தினரின் உறவுகள் தம்மைக் கொல்லத் தேடுவதாகவும்" அடித்துவிட, யேர்மனியின் நீதித்துறையினர் ஆளைத்தூக்கிச் சிறையிலடைத்துவிட்டார்கள்.

இது தொடர்பாக உடனே செயலில்இறங்கிய சிங்கள நண்பர்கள், குறித்த நபருடைய சட்டவாளரைத் தொடர்புகொண்டு, "இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், மீள அனுப்பப்படாமல் வதிவிட அனுமதி பெற்று வாழ்வதற்காக அவர் பொய் சொல்கிறார்" என்றும் தெளிவுபடுத்திவிட, வழக்குத் திசைமாறியது.

சட்டவாளர் உண்மையைச் சொல்லும்படி அவ்விளைஞரை வற்புறுத்த, தாம் பொய் சொன்னதாக நீதிமன்றில் இளைஞர் ஒப்புக்கொண்டது மட்டுமன்றி, இவ்வாறு பொய்சொன்னால் வதிவிட அனுமதி கிடைக்குமென்று சொல்லி, பெருந்தொகைப்பணத்தைக் கூலியாக வாங்கிய ஓர் தமிழ்மொழிபெயர்ப்பாளரை நோக்கிக் கையை நீட்டிவிட, மொழிப்பெயர்ப்பாளர் இப்போது சிறையிலிருக்கிறார்.

பொய் கூறிய இளைஞர் உண்மையை ஒப்புக்கொண்டதால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, வதிவிட அனுமதியும் வழங்கப்பட்டது. இவ்வாறுதான் இப்பொழுது கதிர்காமரைச்சுட்ட நான்காவது நபர் யேர்மனியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இவர்கள் வதிவிட அனுமதிக்காக இவ்வாறு பொய்சொல்கையில், இவர்களது வாக்குமூலத்தை வைத்து, கதிர்காமரைச் சுட்டது புலிகளே என உலக அரங்கில் சிறிலங்கா நிறுவிவிடும். ஏனெனில் இதுவரையில் கதிர்காமர் கொலைவழக்கில் புலிகளுக்குத் தொடர்பிருப்பதாக எங்கும் நிரூபிக்கப்படவில்லை.

கதிர்காமர் சுடப்பட்ட மறுநாளே, புலிகளுக்கும் இக்கொலைக்கும் தொடர்பில்லையென, தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் வெளிப்படையாக அறிவித்தும் கூட, இங்கே வருகின்ற தமிழ் இளைஞர்கள் தமது சுயநலத்துக்காக ஏன் இவ்வாறு பொய் சொல்லி புலிகளைக் குற்றவாளிகளாக்குகிறார்கள் எனச் சிங்கள நண்பர்கள் என்னிடம் கேட்கையில், மிகவும் கேவலமான இனம் நாமென்று சொல்லிவிடலாமோ என யோசிக்கிறேன்.

ஏனெனில்; தமிழீழ விடுதளைக்காகப் போராடுபவர்கள் உலக அரங்கில் எதைச் சொல்லவேண்டும் / எதைச் சொல்லக்கூடாது என்பது நம்பக்கம் நிற்கும் சிங்களநண்பர்களுக்குப் புரிகிறது. ஆனால் நம்மவருக்கோ ...?

-தேவன்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.