சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் என்பது தமிழரை இரண்டாம் தர குடிகளாக மாற்றும் திட்டமே! -ஈ. சரவணபவன்

சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் என்பது தமிழரை இரண்டாம் தர குடிகளாக மாற்றும் திட்டமே! -ஈ. சரவணபவன்


இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் நாட்டின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன கூறியிருப்பதை, தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே நோக்கமுடியும். இது இனங்களிடையே ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.


அவர் இன்று (02) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அதில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,


"பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்னவின் கருத்து மீண்டும் ஒரு இன ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இனங்களிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே உள்ள இடைவெளியை மேலும் விரிசலடையச் செய்து அரசியல் இலாபம் தேடுவதில் கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் முனைப்புடன் செயற்படுகின்றமை தெரிகின்றது.


தற்போதைய அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, தமிழர்கள் தேசியகீதம் பாடக்கூடாது என்று அவர்கள் சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட முடியாத நிலைமையே இருக்கின்றது.


தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரையில் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்படுவதை ஊக்குவித்திருந்தது.


தேசிய கீதம் இசைப்பது என்பது ஒரு நாட்டின் பிற தேசிய அடையாளங்களைப் போலவே, நாட்டிலும், அதன் சமூகத்திலும், அதன் மக்களிடமும் பொதிந்துள்ள பாரம்பரியம், வரலாறு மற்றும் அவை சார்ந்த நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு செயற்பாடே!


பெரும்பான்மை இனத்தவர், சிறுபான்மையினரின் உணர்வுகளை மதித்து அவர்கள் நாட்டின் மேல் கொண்டுள்ள பற்றை ஊக்குவிக்கவும், அதற்கு இடமளிக்கும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாக பெருமைப்படவும் வேண்டும். அனைவருக்கும் புரியும் வகையில் அவரவர் மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதே ஒற்றுமையின் வெற்றி என நான் கருதுகின்றேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.