மியன்மாரின் ஆட்சி கவிழ்ப்பு! உண்மையில் அப்படி என்னதான் நடந்தது? முழு விபரம்!

மியன்மாரின் ஆட்சி கவிழ்ப்பு! உண்மையில் அப்படி என்னதான் நடந்தது? முழு விபரம்!


மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மற்ற மூத்த அதிகாரிகளும் இன்று (01) அதிகாலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாயின.


தேர்தல் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டிவந்த மியன்மார் இராணுவம் இன்று அங்கு நெருக்கடிநிலையை அறிவித்தது.


ஆங் சான் சூச்சி என்பவர், சர்வாதிகாரத்திற்கு எதிரான மியன்மாரின் நீண்ட போராட்டத்தை வழிநடத்தியவர்.


முன்னாள் அரசியல் கைதியாக இருந்த அவர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் தேதி அன்று நடந்த தேர்தலில் 83 விழுக்காட்டு இடங்களை வென்றார்.


இந்நிலையில், தேர்தலில் மோசடி நடந்ததாக குறை கூறும் நாட்டின் இராணுவம் கடந்த வாரம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தும் என்ற அச்சம் எழுந்தது.


மியன்மாரில் யார் ஆட்சி செய்கிறார்?


அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 75 வயது திருவாட்டி சூச்சி, 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்தார்.


பல வருடங்களாக வீட்டுக் காவலில் இருந்த அவர், தொடர்ந்து ஜனநாயகத்திற்காக நடத்திய போராட்டத்தால் அனைத்துலகப் பிரபலமாக மாறினார்.


இந்நிலையில், மியன்மார் இராணுவம், அதனை அரசமைப்பைப் பாதுகாக்கும் முக்கிய அங்கமாகக் கருதுகிறது. அதனால், அது அரசியல் அமைப்பில் தனக்கு ஒரு நிரந்தரப் பங்கை வகித்து வருகிறது. அரசமைப்பின்படி, நாடாளுமன்றத்தில் கால்வாசி இடங்கள் இராணுவத்துக்குச் சொந்தம்.


உள்துறை, தற்காப்பு, எல்லைப்பாதுகாப்பு ஆகிய துறைகள் இராணுவத்தின் கீழ் செயல்படுவதால், அது அரசியல்ரீதியான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.


இராணுவம் ஏன் அண்மைத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை?


பல மாவட்டங்களில், வாக்களிப்புப் பட்டியல்களில் போலியான பெயர்கள் போன்ற முரண்பாடுகள் இருந்ததாக இராணுவம் குற்றஞ்சாட்டியது.


தனது புகார்களுக்குத் தேர்தல் ஆணையம் அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை என்றும் அது கூறியது.


முறைகேடுகள் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் அளவுக்கு இருந்திருக்குமா என்ற கேள்விக்கு இராணுவம் பதில் அளிக்கவில்லை.


கட்சிகளின் பதில்?


ஆளும் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தேர்தல் வெற்றி குறித்தோ, இராணுவத்தின் புகார்கள் குறித்தோ சூச்சி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.


ஆனால் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் எந்தவொரு தேர்தல் முறைகேடுகளும் தேர்தல் முடிவை மாற்றியிருக்காது என்றும் ஜனநாயக தேசிய லீக் கட்சி கூறியது.


தேர்தலில் பங்குபெற்ற 90க்கும் மேற்பட்ட கட்சிகளில், குறைந்தது 17 கட்சிகள் பெரும்பாலும் சிறிய முறைகேடுகள் குறித்து புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவை பெரும்பாலும் சிறிய கட்சிகள்.


தேர்தல் ஆணையம் மோசடி என்று கூறும் அளவுக்கு எந்தத் தவறும் நடக்கவில்லை என்று கூறுகிறது.


இராணுவம் என்ன கூறுகிறது?


இராணுவப் படைத்தளபதி ஸாவ் மின் துன் (Zaw Min Tun) இராணுத்தின் நோக்கங்கள் குறித்த கேள்விகளுக்கு உறுதியற்ற பதில்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.


இராணுவம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும், உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார்.


புதிய அரசாங்கத்துடன் இராணுவம் ஒத்துழைக்குமா என்று கேட்டபோது, பொறுத்திருந்து பார்க்குமாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.


அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?


மியன்மார் அரசமைப்புச் சட்டம், மிக மோசமான சூழ்நிலைகளில் இராணுவத் தளபதி ஆட்சிக் கவிழ்ப்பைக் கொண்டுவரலாம் என்று கூறுகிறது.


நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் சூழல், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குப் பங்கம் விளைவிக்கும் சூழல், மியன்மாரின் தன்னாட்சி அதிகாரத்தை இழக்கும் சூழல் ஆகியவற்றில் அத்தகைய முடிவு எடுக்கப்படலாம் என்று அரசமைப்பு சொல்கிறது.


அது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பின் சாத்தியம்.


இருப்பினும் நெருக்கடி நிலையை நாட்டின் அதிபர் மட்டுமே அறிவிக்க முடியும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.  


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.