
அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது இன்றைய தினம் (01) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நீதிமன்றின் உத்தரவு ஒன்றை அமுல்படுத்தும் நோக்கில் அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு நீதிமன்ற அதிகாரிகளும் பொலிஸாரும் இன்று சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டில் இருந்தவர்கள் பொலிஸாருக்கும், நீதிமன்ற அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவித்துள்ளனர்.
இதனை அறிந்து கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த இடத்திற்கு சென்ற போது அங்கிருந்த நான்கு பேர் அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் இரண்டு பெண்களுக்கும் தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.