
முகநூலின் சக நிறுவனமான வாட்ஸாப் செயலி உலகெங்கும் மிக மிக அதிக அளவில் பயனில் உள்ளது. சமீபத்தில் வாட்ஸாப் தனது புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி இந்த கொள்கைகளை ஒப்புக் கொள்வோர் மட்டுமே இனி வாட்ஸாப் செயலியைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையை ஒப்புக் கொள்ளாதோர் கணக்குகள் உடனடியாக முடக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த புதிய கொள்கையின்படி வாட்ஸாப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், செய்திகள், படங்கள், வீடியோக்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்தும் நிர்வாகத்தால் சேமிக்கப்பட்டு அவை முகநூலுடன் விளம்பர தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
பயனாளிகள் தங்கள் வாட்ஸாப் மொபைலில் இருந்து இவற்றை அழித்தாலும் அது முகநூல் சர்வரில் இருந்து நீக்கப்பட மாட்டாது. இவற்றை முகநூல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் மூலம் ஒரு பயனர் வாட்ஸாப் மூலம் அனுப்பும் அந்தரங்க தகவல்களும் முகநூல் நிர்வாகத்தால் பகிர வாய்ப்புள்ளது. இது ஒருவரது அந்தரங்க உரிமைக்கு எதிரானது எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த அறிவிப்பால் பலர் வாட்ஸாப் செயலியில் இருந்து விலகி டெலிகிராம் போன்ற வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம், நேற்று மத்திய அரசு தகவல் ஒளிபரப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது.
அந்த கடிதத்தில், “எமது சம்மேளனம் வாட்ஸாப் நிறுவன புதிய கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் மக்களின் தனித்துவம் பாதிக்கப்படும். எனவே இந்த விவகாரத்தைத் தீவிரமாக அரசு கருத வேண்டும். உடனடியாக வாட்ஸாப் செயலியை இந்தியாவில் தடை செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது